டிரெண்டிங்

“என் ஒரு வாக்கிற்காக இவ்வளவு செலவா ?” - மெய்சிலிர்த்த ‘தனி ஒருவன்’

“என் ஒரு வாக்கிற்காக இவ்வளவு செலவா ?” - மெய்சிலிர்த்த ‘தனி ஒருவன்’

webteam

குஜராத் மாநிலத்தின் கிர் காட்டு பகுதியில் ஒரே ஒரு வாக்காளருக்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் உலகளவில் கவனிக்கப்படும் தேர்தல்களில் ஒன்று. ஜனநாயக முறையில் நடைபெறும் இந்திய தேர்தலில் அதிகமான தேர்தல் பணியாளர்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவார்கள். அத்துடன் வாக்களர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பார்கள். ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும். ஆனால் ஒரு சில வாக்குச் சாவடியில் வாக்காளர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் கூட இருக்கும். ஆனால் அந்த ஒரு வாக்காளரும் தனது ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து ஆயத்தங்களையும் செய்யும். அந்தவகையில் குஜராத் மாநிலத்தின் கிர் காட்டு பகுதியில் ஒரே ஒரு வாக்காளருக்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்திலுள்ள 26 தொகுதிகளுக்கும் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் 4,51,25,680 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக மொத்தம் 51,709 வாக்குச்சாவடிகள் குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டன. இதில் கிர் காட்டு பாகுதியிலுள்ள ஜூனாகத் பகுதியில் ஒரே ஒரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

இந்த வாக்குச்சாவடியில் பரத்தாஸ் பாப்பு என்பவர் வாக்காளராக உள்ளார். அவர் இன்று தனது வாக்கை அளித்துவிட்டு, “அரசாங்கம் என்னுடைய ஒரே வாக்கிற்காக இந்த வாக்குச்சாவடியை அமைத்துள்ளது. அத்துடன் ஒரே வாக்கிற்கு இவ்வளவு பணத்தை செலவு செய்துள்ளது. இதனால் நான் இங்கு வாக்களித்து விட்டேன். இங்கு 100% வாக்குப்பதிவாகியுள்ளது. இதே போன்று மற்ற பகுதியிலும் மக்கள் அனைவரும் வந்து வாக்களித்து அங்கும் 100% வாக்குப்பதிவாகவேண்டும் என்று நான் கேட்டுகொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.