சின்னப் பையன்தான் ஆனா பலசாலி என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர் "கடந்த இரண்டுப் போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவருக்கு கிடைத்த வாய்ப்பை திறமையாக பயன்படுத்திக்கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டபோது நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம். அவரால் தொடர் தொடங்குவதற்கு முந்தைய பயிற்சியில் கலந்துக்கொள்ள முடியவில்லை. ஏறக்குறைய 4 முதல் 5 வாரம் தனிமைப்படுத்தலுக்கு பின்பே அவரால் பயிற்சிக்கு வர முடிந்தது" என்றார் பிளமிங்.
மேலும் பேசிய அவர் "அவரை எப்படியாவது அணியுடன் ஒன்றிணைய வைக்க முயற்சி மேற்கொண்டோம். ஆனால் அவர் தயாராக சில காலம் தேவைப்பட்டது. ஆனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு சரியான வீரர் கிடைத்துவிட்டார். அவரால் பேட்டிங்கை மிகவும் எளிதாக செய்ய முடியும், அவரின் டைமிங் பிரமாதமாக இருக்கும். பலமான பீல்டிங் இடையேயும் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் திறன் படைத்தவர். சின்னப் பையன்தான் ஆனால் பலசாலி" என்றார் பிளமிங்.
தொடர்ந்து பேசிய அவர் "சென்னையில் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது நாங்கள் அவரை கண்டு வியந்தோம். ஆனால் அமீரகம் வந்த பின்பு அவரால் பயிற்சியில் உடனடியாக ஈடுபடாமல் போனபோது வருத்தமாக இருந்தது" என்றார் ஸ்டீபன் பிளமிங்.