டிரெண்டிங்

வலிப்பு நோயால் உயிருக்கு போராடிய தொழிலாளி... தக்க நேரத்தில் மீட்ட பெண் காவலர்

வலிப்பு நோயால் உயிருக்கு போராடிய தொழிலாளி... தக்க நேரத்தில் மீட்ட பெண் காவலர்

kaleelrahman

சென்னை கோயம்பேட்டில் வலிப்பு வந்து உயிருக்குப் போராடிய சுமைதூக்கும் தொழிலாளியை தக்க சமயத்தில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவலரை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.


கடந்த 21ஆம் தேதி மதியம் கோயம்பேடு மார்கெட் 7வது கேட் அருகில் வில்லிவாக்கம் காவல்நிலைய முதல்நிலை காவலர் முத்து கிருஷ்ணவேணி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோயம்பேடு மார்கெட்டில் திருச்சியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி லட்சுமணன் (35) வலிப்பு வந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை கவனித்த காவலர் முத்து கிருஷ்ணவேணி விரைந்து சென்று லட்சுமணனுக்கு தகுந்த முதலுதவி சிகிச்சை செய்தார். தொடர்ந்து அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதால் நெஞ்சில் கைவைத்து அழுத்தி முதலுதவி செய்து அவரை காப்பாற்றினார். பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முத்து கிருஷ்ணவேணியின் மனிதநேய காவல் பணி தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டையும் பெற்றது.


இதனை அறிந்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று பெண் காவலர் முத்து கிருஷ்ணவேணியை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


மேலும் முதலுதவி சிகிச்சை அளித்த சம்பவம் நடந்தது எப்படி? என உதவி செய்த முழு விவரத்தை கேட்றிந்தார். மற்ற போலீசாரும் இது போன்று மனிதநேய காவல் பணியோடு இருக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரைகளை வழங்கினார்.