கர்நாடகாவில் ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. மஜதவும் இதனை ஒப்புக் கொண்டுள்ளதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு 20 அமைச்சர்களும், மஜதவுக்கு 14 அமைச்சர்களும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், ஆளுநரை மாலை 5 மணிக்கு சந்தித்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க குமாரசாமி கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பாக பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்து. அனுமதி மறுக்கப்பட்டதால் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே, காங்கிரஸ் குழுவுடன் இணைந்து மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கவுள்ளதாக மதசார்பற்ற ஜனதா தளம் நிர்வாகி தானிஷ் அலி கூறியுள்ளார். மேலும், பாஜக ஆட்சி அமைக்க விடமாட்டோம் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.