டிரெண்டிங்

போலி பணிநியமன ஆணை: பள்ளியில் இளநிலை உதவியாளராக சேர முயன்றவர் மீது வழக்கு !

போலி பணிநியமன ஆணை: பள்ளியில் இளநிலை உதவியாளராக சேர முயன்றவர் மீது வழக்கு !

kaleelrahman

கடலாடி அருகே போலியான பணி ஆணையை வைத்து பள்ளியில் இளநிலை உதவியாளராக சேர முயன்றவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள சிக்கல் மேல்நிலைப்பள்ளியில் சிக்கல், பன்னந்தை, கீரந்தை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பணிநியமன ஆணை வழங்கப்பட்டதாக கடந்த 23ஆம் தேதி சிக்கல் தலைமையாசிரியர் ஜெயகுமாரிடம் சென்று வழங்கியுள்ளார்.


இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் .இந்நிலையில் முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, தாம் எந்தஒரு பணி ஆணையும் வழங்கவில்லை என்றும் போலியான பணிநியமன ஆணையை தயார் செய்து பள்ளியில் இளநிலை உதவியாளராக சேரவந்ததும் தெரியவந்துள்ளது.


இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் போலியான பணிநியமன ஆணையை தயார் செய்து பணியில் சேர முயன்றதாக புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் வலம்புரி நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருமலை விசாரணை நடத்தி வருகின்றனர்