டிரெண்டிங்

ரியலான வீட்ல விசேஷம்... 47 வயதில் தனது மகளுக்கு தங்கையை பெற்றுக்கொடுத்த தாய்!

JananiGovindhan

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ படத்தில் இரண்டு இளம் மகன்களின் தாயொருவர், முதிய வயதை எட்டும் சமயத்தில் கருத்தரித்தரிப்பார். இந்தப் படத்தை தமிழில் ‘வீட்ல விசேஷம்’ என்ற பெயரில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடத்திருப்பார்.

இப்படம் வெளியான போது, ‘இதுபோன்ற படங்களில் நடப்பது போல நிஜ வாழ்க்கையில் நடக்க வாய்ப்பே இல்லை’ என்ற பேச்சுகளெல்லாம் எழுந்திருந்தன. ஆனால் அந்த Stereotype பேச்சுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உண்மையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

அது தொடர்பான பதிவு Humans of Bombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு பலரது மனங்களையும் வென்றிருக்கிறது. அதன்படி 23 வயது இளம்பெண்ணின் தாயாக இருக்கக் கூடிய 47 வயது பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தான் அக்காவாகியிருப்பதை மிகவும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார் ஆர்யா பார்வதி என்ற அப்பெண். அதில், தனக்கு உடன் பிறந்த சகோதரனோ, சகோதரியோ இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை எப்போதும் தனது பெற்றோரிடம் கூறியதாகவும், ஆனால் தான் பிறந்த பிறகு தாயின் கர்ப்பப்பையில் சில பிரச்னைகள் இருந்ததால் மீண்டும் கருவுருதல் சாத்தியமில்லை என்பதால் அந்த ஆசை நிராசையாகவே போனதாக ஆர்யா பார்வதி (23) குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “கேரளாவில் இருந்து மேற்படிப்புக்காக பெங்களூருவுக்கு நான் சென்றுவிட்டேன். ஆனால் என் வாழ்க்கையையே ஒரு ஃபோன் கால் திருப்பிப் போட்டுவிட்டது. அதன்படி அண்மையில் என் தந்தை என்னை தொடர்புகொண்டு என் அம்மா கர்ப்பமாக இருக்கிறார் என கூறியதும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமே எனக்கு ஏற்பட்டது. அப்போது, ‘உன்னிடம் கூறினால் நீ தவறாக நினைத்தால் என்னாவது என்றே சொல்லாமல் இருந்தோம்’ என்ற தந்தையிடம், ‘நான் ஏன் இதை தவறாக எண்ணப்போகிறேன்? இதற்காகத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தேன்’ என்று கூறினேன்” என ஆர்யா பார்வதி தெரிவித்திருக்கிறார்.

“இதனையடுத்து, அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கேரளா சென்று அவருக்கு பக்கபலமாக இருந்தேன். கடந்த வாரம்தான் எனக்கு ஒரு குட்டி தங்கை பிறந்திருக்கிறார். என்னை அவள் அக்கா என எப்போது அழைப்பார் என ஆவலுடன் காத்திருக்கிறேன். பார்ப்பவர்களுக்கு எங்களிடையே இருக்கு வயது வித்தியாசம் விசித்திரமாகத்தான் இருக்கும். ஆனால் எங்களுக்கு அது பிரச்னையே இல்லை. அதற்காக அவர்களை விட்டு என்னால் பிரிந்திருக்கவே முடியாது” என ஆர்யா நெகிழ்ச்சிப்பொங்க கூறியிருக்கிறார். இந்த பதிவை கண்ட நெட்டிசன்கள் பலரும், “இதில் விசித்திரமாக பார்க்க எதுவுமே இல்லை. மிகவும் அழகான உணர்வு” என்று நேர்மறையாகவே தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளதோடு, ஆர்யா பார்வதியின் குடும்பத்தினருக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோக, தாமதமாக கருவுருவதை இயல்பாக்க வேண்டும் எனவும் பலரும் தத்தம் கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள்.