டிரெண்டிங்

744 மருத்துவர்கள் ஒருவாரத்திற்குள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

744 மருத்துவர்கள் ஒருவாரத்திற்குள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

webteam

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையை நீக்க 744 மருத்துவர்கள் ஒருவாரத்திற்குள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலர் உயிர் இழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மழைக்கால சிறப்பு முகாம்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை அமைச்சர் திடீரென ஆய்வு செய்தார். இங்குள்ள பிரசவ வார்டு, ஆண்கள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பரிவுகளையும் ஆய்வு செய்த அவர், மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையை போக்க கடந்த மாதம் 316 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். அடுத்த கட்டமாக, 744 எம்.டி மற்றும் எம்.எஸ் படித்த சிறப்பு மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.