டிரெண்டிங்

”காலையில் எழுந்ததும் சிறுநீரைதான் குடிப்பேன்” - யூரோ தெரப்பி கொடுக்கும் இந்த நபர் யார்?

JananiGovindhan

பசுவின் கோமியத்தை குடிப்பது தொடர்பாக பலரும் அறிந்திருக்கக் கூடும். ஏனெனில் அதனால் மருத்துவ பலன்கள் இருப்பதாக நம்பப்பட்டாலும் அறிவியல்பூர்வமாக அவை ஏதும் நிரூபிக்கப்படவில்லை. 

ஆனால் தனது சொந்த சிறுநீரையே ஒருவர் தினந்தோறும் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார் என்பதை படிக்கும்போதே சற்று முகம் சுழிக்க வைக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை. 

கொலொரடோவைச் சேர்ந்த 68 வயதான ஆரோக்கிய பயிற்சியாளர் ஒருவர் ஒவ்வொரு நாளும் காலைவேளையில் தனது சிறுநீரை குடிக்கும் விநோதமான பழக்கத்தை கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக டெய்லி மெயில் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “68 வயதான இந்த நபர் ஒவ்வொரு நாள் இரவும் தனது சிறுநீரை எடுத்து அதனை சேமித்து வைத்து மறுநாள் காலை எழுந்ததும் குடித்து வருகிறார். ஏனெனில் சிறுநீரை குடிப்பதால் அது உடலுக்கு நல்லதை கொடுப்பதாக நம்புகிறாராம்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், தனது சிறுநீரை பல நாட்களுக்கு சேமித்து வைத்து அதனை கால் ஊற வைக்கவும், கண்களை கழுவுவதற்கும் முதியவர் பயன்படுத்துகிறாராம். இவரை தீவிரமாக பின்பற்றுவோரில் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு சிறுநீரை குடிக்கச் செய்ததாகவும், அதனால் அவரது குழந்தையின் உடல் நலம் தேறியிருப்பதாகவும் தெரிவித்ததாக அந்த முதியவர் கூறியிருக்கிறார். இன்னும் சிலர், தங்களது நாய்களை சிறுநீரில் குளிக்க வைக்க அனுமதித்திருக்கிறார்களாம்.

அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபணமாகாவிட்டாலும், சிறுநீரை குடிப்பதால் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாகவும், சூரிய ஒளியால் ஏற்படும் சன் பர்னை நீக்கவும் செய்கிறது என உறுதிபட அந்த முதியவர் கூறுகிறார்.

இந்த பழக்கத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நபர் கடைப்பிடித்து வருகிறாராம். இதற்காக தனி பயிற்சியே இவர் நடத்துகிறாராம். அதற்கு 345 அமெரிக்க டாலர் வசூலிக்கிறாராம்.

இது தொடர்பாக பேசியுள்ளார் Brother Sage என அழைக்கப்படும் அந்த முதியவர், “காலையில் எழுந்ததும் இரவில் சேமித்து வைத்த சிறுநீரைதான் குடிப்பேன். பெரும்பாலான மக்கள் காலையில் அதை முதலில் குடிப்பார்கள் மற்றும் உண்ணாவிரதம் இருப்பவர்கள் அல்லது டிடாக்ஸ் செய்ய நினைப்போர் தொடர்ந்து குடிக்கலாம்.

அதாவது அவர்கள் சேகரிக்கும் சிறுநீரை நாள் முழுவதும் குடிப்பார்கள். அதனை எந்த அளவுக்கு சுத்தமாக எடுத்துக்கொள்கிறோர்கள் அந்த அளவுக்கு உங்களால் அழகாகவும், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.” எனக் கூறியிருக்கிறார்.

சிறுநீரை குடிப்பது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, “இந்த பழக்கத்தை மறுக்கும், சந்தேகிக்கும் நபர்களை தொடர்ந்து சந்திக்கிறேன். ஆனால், அவர்களிடம் நான் கருணையாக இருக்கவே கற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு இதன் அருமை தெரியாது.” என்றிருக்கிறார் brother sage. இதுபோக யூரோ தெரப்பி என்ற சிகிச்சையை மேற்கொள்வதற்காகவும் அவர் திட்டமிட்டு பணியாற்றி வருகிறாராம்.