டிரெண்டிங்

அடுத்த கோயம்பேடாக மாறும் மதுரை பரவை காய்கறி மார்க்கெட்: 2000 பேரை கண்காணிக்க முடிவு

அடுத்த கோயம்பேடாக மாறும் மதுரை பரவை காய்கறி மார்க்கெட்: 2000 பேரை கண்காணிக்க முடிவு

webteam

சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பரவிய கொரோனா தொற்றால், 2000 பேரை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறி சந்தை நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் அளவிற்கு பெரிய வியாபார ஸ்தலமாக உள்ளது.வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து இங்கு வரும் காய்கறிகள் தென்மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன.லோடுமேன்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள், விவசாயிகள் என தினமும் இரண்டாயிரம் பேர் பரவை சந்தையில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் போன்றே பரவை மார்க்கெட்டிலும் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் சந்தை மூடப்பட்டு நான்கு வெவ்வேறு இடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பரவை காய்கறி சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அதனால் பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பணியாற்றியவர்கள் விவரம் பெறப்பட்டு 1009 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 25 பேருக்கு தீவிர தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமை மையத்திற்கு அழைத்து வர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பரவை சந்தையில் பணியாற்றியவர்களுடன் அடுத்தடுத்து தொடர்பில் இருந்தவர்கள் என 2000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.