டிரெண்டிங்

அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 17 பேர் காயம்

அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 17 பேர் காயம்

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பெண்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லும்போது சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 17 பேர் காயமடைந்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வந்து அவர்கள் நடத்தும் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க வைக்கின்றனர். அவ்வாறு சரக்கு வாகனங்களில் பாதுகாப்பு இல்லாமல் பொதுமக்களை ஏற்றி வரும்போது, எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவதால் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வரக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டியில், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைரமுத்து கலந்துகொண்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிடாரம்பட்டியைச் சேர்ந்த 20 பெண்களை கூட்டம் முடிந்தவுடன் சரக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது காயாம்புஞ்சை என்ற இடத்தில் சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10 மாத குழந்தை உட்பட 17 பேர் காயமடைந்தனர், மேலும் காயமடைந்த அனைவரும் வலையப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 10 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.