டிரெண்டிங்

வாக்காளர் அட்டையுடன் வந்தால் 16% தள்ளுபடி-கார் சர்வீஸ் நிறுவனத்தின் விழிப்புணர்வு முயற்சி

வாக்காளர் அட்டையுடன் வந்தால் 16% தள்ளுபடி-கார் சர்வீஸ் நிறுவனத்தின் விழிப்புணர்வு முயற்சி

webteam

திருச்சியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்தால் 16 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கும் கார் சர்வீஸ் நிறுவனத்தின் சலுகை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியினரும், வேட்பாளர்களும் தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருச்சியில் உள்ள கார் சர்வீஸ் நிறுவனமொன்று தேர்தலையொட்டி வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ஆஃபரை வழங்கியிருக்கிறது. கடைவெளியே பேனர், கட்சிகளின் கொடிகள் என அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தக்கடையில், நடைபெற இருக்கும் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் உள்ள நிலையில், அதனை குறிப்பிடும் வகையில் 16 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்த தள்ளுபடி என்பது வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இன்று முதல் வருகின்ற தேர்தல் வரை வழங்கப்பட உள்ள இந்தச் சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கான கார் சர்வீஸில் 16 சதவீதம் வரை சலுகையை பெற முடியும்.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் மாலதி கூறும்போது, “ வாக்களிப்பது நம்முடைய ஜனநாயக கடமை. ஆகவே 100% வாக்களிப்பை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.” என்றார்.