டிரெண்டிங்

“மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவோம்”- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு

“மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவோம்”- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு

Veeramani

திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்து சொல்லப்படாத நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவோம் என அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுதி அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மாநில உரிமை, பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்துவோம் என்று கூறினார்.

இலங்கை தமிழர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் எழுப்புவோம் என்று தெரிவித்தார். மதுவிலக்கு மற்றும் போதைப்பழக்கம் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்து சொல்லப்படவில்லையே என்ற கேள்விக்கு, மதுவிலக்கு அவசியம் என்ற தங்கள் கட்சியின் கொள்கையை வெளிப்படுத்தி இருக்கிறோம் என்று கே.பாலகிருஷ்ணன் பதில் அளித்தார்.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை, கோட்பாடு இருப்பதால், கூட்டணியில் இருந்தாலும் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதியதலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், “ஒவ்வொரு கட்சியும் என்ன செய்யப்போகிறோம் என சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. பேரவையில் நாங்கள் எழுப்பும் பிரச்னைகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். கூட்டணியில் இருந்தாலும் அனைத்து கட்சிகளும் ஒரேநிலையில் இருக்க அவசியமில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை, கோட்பாடு இருக்கிறது. அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுநோக்கத்திற்காக கூட்டணி” என்று கூறினார்.