டிரெண்டிங்

“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்

“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்

webteam

துணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை; துணைவேந்தரை நியமிப்பது ஆளுநரே என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “பல கோடி ரூபாய் பணம் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டுள்ளது. பல கோடி பரிமாற்றத்தால் நியமனம் நடைபெற்றதாக தெரியவந்தது. அதனை நான் நம்பவில்லை. துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததை கண்டு வருத்தமடைந்து அதை மாற்ற நினைத்தேன். துணை வேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். அதன்படி 9 துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்தேன்” என்று கூறினார்.

இந்நிலையில் ஆளுநரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த கே.பி.அன்பழகன்,  “துணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை; துணைவேந்தரை நியமிப்பது ஆளுநரே” என்று கூறினார். மேற்கொண்டு “தேர்வுக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். தேர்வுக் குழு அமைப்பதுடன் அரசின் பணி முடிந்து விடுகிறது. தேர்வுக் குழுவில் ஒருவரை மட்டும்தான் அரசு தெரிவு செய்கிறது. அதற்கும் தகுதி வாய்ந்த 10 ஆண்டுகள் பேராசிரியர்களாக பணி புரிந்தவர்களாக இருக்க வேண்டும், அல்லது சிறந்த கல்வியாளராக இருக்க வேண்டும். தேர்வுக் குழுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை ஆளுநர் நியமிக்கிறார். அதிலும் அரசு தலையிடுவதில்லை. 

தேர்வுக் குழு என்ன செய்கிறது என்பதை பற்றி அரசுக்கு கவலையில்லை. தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்ட 3 பேர்களில் ஒருவரை துணை வேந்தராக நியமிக்கிறார் ஆளுநர். அந்த மூன்று பேரையும் நேரில் அழைத்து நேர்காணல் நடத்துகிறார். நடைமுறை இப்படி இருக்க, ஆளுநர் கூறியிருக்கும் கருத்து வியப்பை அளிக்கிறது. அவர் எதனை மனதில் வைத்து சொன்னார் என்பதை அவரிடம் கேட்டால்தான் தெரியும்” என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.