டிரெண்டிங்

“எந்தநேரமும் தேர்தலுக்கு தயாராக இருங்கள்” - வைரலான குமாரசாமி மகன் பேச்சு

“எந்தநேரமும் தேர்தலுக்கு தயாராக இருங்கள்” - வைரலான குமாரசாமி மகன் பேச்சு

rajakannan

தேர்தலுக்கு எந்தநேரமும் தயாராக இருக்க வேண்டுமென தொண்டர்களிடையே கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் பேசிய வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. 

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றன. பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் இருக்க, மஜத உடன் கூட்டணி அமைத்தது. முதலமைச்சர் பதவியையும் மஜதவுக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது. முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார். 

மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதலே இரு கட்சிகளிடையே சலசலப்பு நிலவி வந்தது. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வெளிப்படையாகவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்வதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், சிக்கல் ஏற்படும் போதெல்லாம் சித்தராமையா தலையிட்டு குமாரசாமியை சமாதானம் செய்து வைப்பார். இப்படிதான் இவ்வளவு நாட்கள் கடந்து வந்தது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி படுதோல்வி அடைந்தது. பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. அதனால், தேர்தலுக்கு பின்னர் ஆட்சி கலைந்துவிடும் என்று பேசப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி முழுமையாக நீடிக்கும் என குமாரசாமி தெரிவித்தார். அதேபோல், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்கும் அவ்வவ்போது அவர் கண்டனம் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், தேர்தலுக்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டுமென தொண்டர்களிடையே முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் பேசியுள்ளார். இதுதொடர்பாக நிகில் குமாரசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், “எந்த நேரத்திலும் நமக்கு தேர்தல் வரலாம். அது சில மாதங்களில் வரலாம். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் வரலாம். அதற்காக எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்பதே நமக்கு உள்ள நிலைமை. தற்போதே நாம் ஒருங்கிணைந்து செயல்பட தொடங்க வேண்டும்” என்று அவர் பேசியுள்ளார்.