டிரெண்டிங்

“டெல்லி கலவரம் 36 மணி நேரத்தில் போலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டது”- அமித் ஷா

webteam

டெல்லி கலவரம் காவல்துறையினரால் 36 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் சிறிது நேரத்தில் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 40-க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். அதன் பின்னர் காவல்துறையினரால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தக் கலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் மக்களவையில் பேசியுள்ளார்.

அவர் பேசும்போது “ கலவரம் நடந்த பகுதி மிகக் குறுகலானது. காய்கறி, பழக் கடைகள் இருந்த பகுதியில் வன்முறை வெடித்ததால் காவல்துறை, தீயணைப்பு வாகனங்கள் உள்ளே விரைந்து செல்ல முடியவில்லை. இரு பிரிவினரும் அதிகமாக உள்ள பகுதியில் இதன் காரணமாக அதிக சேதங்கள் ஏற்பட்டன. கலவரத்துக்கு ஹவாலா பணம் மூலம் நிதி வழங்கிய மூன்று பேரை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். கலவரம் 36 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. சிலர், நான் ஏன் கலவரத்தின்போது அங்கு செல்லவில்லை என கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் நான் அங்கு சென்றால் என்னுடைய பாதுகாப்பிற்காக அதிக அளவில் காவலர்கள் கூடுவார்கள், அதன் காரணமாகவே நான் அங்கு செல்லவில்லை.

வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்னுடைய அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் முழு விபரங்களையும் இங்கு தெரிவிக்க இயலாது.” என்று பேசினார்.