தங்களது நிபந்தனை ஒத்துவரவில்லை என்றால் கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என்று சிவசேனா கூறியுள்ளது.
கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் பாஜக மீது தொடர்ச்சியாக சிவசேனா கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தது. ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா நிச்சயம் வெளியேறிவிடும் என்று கூட பேசப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது என்று இருவரும் முடிவு செய்துள்ளார்கள்.
பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அமித்ஷா, தேவேந்திர பட்னாவீஸ், உத்தவ் தாக்கரே மூவரும் பாஜக சிவசேனா கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூட்டாக வெளியிட்டனர். மக்களவைத் தேர்தலை போல், சட்டசபை தேர்தலும் கூட்டணி என்று அறிவித்தனர்.
சிவசேனா உடனான கூட்டணியால் பாஜகவின் பெரிய சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், கூட்டணி அறிவிப்பு வெளியான இரண்டு நாட்களில் பாஜக- சிவசேனா தலைவர்களிடையே வார்த்தைபோர் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சி முதல்வர் பதவியை எடுத்துக் கொள்ளலாம் என்று பாஜக தலைவர் சந்திரகாந்த் பாடில் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு சிவசேனா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா தலைவர் ராம்தாஸ் கடாம், “சிவசேனா-பாஜக இடையிலான ஒப்பதந்தத்தில் இரண்டு முக்கிய நிபந்தனைகள் மட்டுமே முன் வைக்கப்பட்டன. ஒன்று, கொன்கான் பகுதியில் உள்ள, நானார் சுத்திகரிப்புத் திட்டத்தை அகற்றுவது. மற்றொன்று முதல்வர் பதவியை இருவரும் ஆளுக்கு பாதிக்காலம் வகிப்பது. அதாவது, பாஜக, சிவசேனா தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருப்பார்கள். இந்த நிபந்தனையை ஒப்புக்கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ளலாம்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.