டிரெண்டிங்

“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு

“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு

rajakannan

விமானப்படை பைலட் அபிநந்தனை திருப்பி அனுப்பாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் பதான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பால்கோட் சம்பவம் தொடர்பாக சரத் பவார் கூறிய விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். 

பிரதமர் மோடி பேசுகையில், “அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி பாகிஸ்தானை எச்சரித்தோம். எங்களுடைய பைலட்டிற்கு ஏதேனும் நடந்தால், மோடி எங்களுக்கு இதனை செய்தார் என நீங்கள் உலகத்திற்கு சொல்வீர்கள் என எச்சரித்தோம்.

இரண்டாவது நாளே மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர், ‘மோடி 12 ஏவுகணைகள் தயாராக வைத்திருக்கிறார். தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. அப்படி செய்தால் நிலைமை மோசமாகிவிடும்’ என கூறினார். அடுத்த நாளே அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துவிட்டது. அப்படி செய்யவில்லை என்றால் நிலைமை வேறாக மாறியிருக்கும்.

அமெரிக்காவே நாம் என்ன செய்வோம் என்பதை சொல்லியிருக்கிறார்கள். அதனால், நான் தனிப்பட்ட வகையில் எதுவும் சொல்லத் தேவையில்லை. நேரம் வரும் போது மட்டும் அதனை பற்றி பேசுவேன்” என்றார்.

காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பால்கோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது. அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார்.