டெக்

48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்

webteam

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஒன்று 48 மெகா பிக்ஸல் கேமராவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலும் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை பதிவு செய்யும் கேமரா கொண்ட போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. ஏனென்றால் தற்போதைய இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

எனவே அதற்கேற்றவாறு தங்களை அழகாக காட்டும் கேமராக்களை கொண்ட போனிற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனை அறிந்து சியோமி தங்கள் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. ஏற்கனவே சியோமி நிறுவனத்தில் ரெட்மி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இந்தப் புதிய போன் தனி இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த போன் முழுக்க முழுக்க கேமராவை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 48 எம்பி கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் முன்புறத்தில் 25 எம்பி மற்றும் 16 எம்பி கொண்ட செல்ஃபி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் புகைப்படத்தை சியோமி நிறுவன அதிபர் லின் பின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போன் இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் வெளியாகிறது. இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த போனை சியோமி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.