Xiaomi India Twitter
டெக்

’Xiaomi’ இந்தியா நிறுவனத்தின் பங்கு சந்தை சரிவு! பணியாளர்களை 1000-க்கும் கீழாக குறைக்க முடிவு!

ஜியோமி இந்தியா நிறுவனம் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை ஆயிரத்திற்கும் கீழாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

Xiaomi இந்தியா நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 1000-க்கும் கீழே குறைக்க திட்டமிட்டுள்ளதால், சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எகனாமிக் டைம்ஸ் செய்தியின் படி, ஜியோமி இந்தியா நிறுவனமானது கடந்த இரண்டு நிதி காலாண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு மொபைல் சந்தையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவரவும் ஊழியர்களை மறுசீரமைக்கவும் இந்த பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Xiaomi

கடந்த சில வாரங்களில் மட்டும் Xiaomi இந்தியா நிறுவனத்தில் 30 பணியாளர்கள் தங்களுடைய வேலையை இழந்தனர். கூடிய விரைவில் மேலும் அதிகமானோர் பணியை இழக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் 1400 முதல்1500 பணியாளர்கள் இருந்த நிலையில், தற்போது ஆயிரத்துக்கும் கீழாக குறைத்து மறுசீரமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

செயல்திறன் அடிப்படையிலேயே தகுதி நீக்கம் நடைபெறும்!

பணி நீக்கம் குறித்து பேசியிருக்கும் ஜியோமி செய்தித் தொடர்பாளர், இந்த பணி நீக்க நடவடிக்கை என்பது முற்றிலும் வணிகம் சார்ந்தது. இதை விரைவாக செய்துமுடிக்க உள்ளூர் இந்தியத் தலைமைக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனத்தை போலவே சந்தையின் சரிவு மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் பணி நீக்கம் நடைபெற்றாலும் தேவையான அளவு வேலையாட்களையும் புதிதாக வேலையில் அமர்த்துவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தகுதி நீக்க செயல்பாடு என்பது உடனடியாக நடைபெறாது என்று தெரிவித்துள்ள அவர், செயல்திறன் அடிப்படையில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஊழியர்களை அடையாளம் காணுவதில் தலைமைக்குழு அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பணி நீக்கம் நடைபெற்றாலும் அது ஊழியர்கள் வேலை செயல்திறன் அடிப்படையில் மட்டுமே இருக்கும். இந்த இக்கட்டான நிலையில் பல பணியாளர்கள் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மேலும் குறைந்துவிடும் என்ற கவலையையும் எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எப்படி இருந்தாலும் முடிவெடுக்கும் அதிகாரம் சீன தலைமையகத்தையே சார்ந்தது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் ஜியோமியின் குளோபல் துணைத்தலைவரான மனுகுமார் ஜெயின், 9 ஆண்டுகள் நிறுவனத்திடம் இணைந்திருந்த பிறகு விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மொபைல் சந்தையில் 3ஆவது இடத்திற்கு சரிந்த ஜியோமி!

Xiaomi இந்திய நிறுவனத்தின் சந்தை நிலையை பொறுத்தவரையில், கடந்த இரண்டு காலாண்டுகளில் முதலிடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளதாக Counterpoint தரவு காட்டுகிறது. அதன் தரவுகளின் படி, முன்னதாக Xiaomi இந்தியாவின் சந்தைப் பங்கு 21 சதவீதமாக இருந்தது. அப்போது Samsung 19 சதவீதத்திலும், Vivo 14 சதவீதத்திலும் 2022-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முடிவடைந்தது.

இந்நிலையில், அடுத்த இரண்டு காலாண்டுகள் கழித்து, தற்போது இருக்கும் தரவுகளின் படி ஜியோமியை பின்னுக்கு தள்ளி Samsung முன்னிலை பெற்றுள்ளது. மேலும் 20 சதவீத பங்குகளுடன் Vivo இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், Xiaomi நிறுவனம் 18 சதவீத பங்குகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. ஒன்பிளஸ் மற்றும் iQOO போன்ற அதிக போட்டியாளர்கள் நுழைந்துள்ளதால், ஜியோமியின் Redmi Note தொடரின் புகழ் குறைந்துள்ளது. அதன் காரணமாக கூட இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.