இன்று உலக எமோஜி தினம். உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் எமோஜியின் வரலாறு என்ன?
நம் எண்ணங்களை வெளிப்படுத்த குறுந்தகவல்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம் உணர்வுகளை வெளிப்படுத்த எமோஜிகள் முக்கியம். வார்த்தைகள் கடத்த முடியாத பல விஷயங்களைக் கூட ஒரு எமோஜி கடத்திவிடுகிறது. சமூக வலைதளங்களில் எமோஜிகளின் பங்கு அதிகம். வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எமோஜிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பேஸ்புக்கில் கமெண்டுகளுக்கு லைக்கிடும் முறை மட்டுமே இருந்தது. பின்னரே ஆங்கிரி, ஹா ஹா, ஹார்ட், வாவ், க்ரை ஆகிய எமோஜிகள் இடம்பெற்றன. இது நல்ல வரவேற்பை பெற்றது.
எமோஜிகள் மூலம் பெரிய கதைகளையே இன்று சொல்லிவிடலாம் என்ற நிலை உள்ளது. சாட்களில் அதிகம் வார்த்தைகளை காட்டிலும் எமோஜிகள் இடம் பெறுகின்றன. ஜப்பானியர்களின் மொழியே சித்திர எழுத்துகள்தான் என்பதால், அவர்களே எமோஜிக்கு முன்னோடிகளாக உள்ளனர்.
1998ல் ஜப்பானைச் சேர்ந்த எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு செயல்வடிவம் கொடுத்தது.அந்த நிறுவனத்தில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர் செய்திகளைப் படங்களாகச் சொல்ல நினைத்தார், அப்போது அளவில் பெரிய விரிவான படங்களைப் பயன்படுத்த தொழில்நுட்பம் இடம் கொடுக்காததால் அவர் உருவாகியதுதான் எளிமையான எமோஜி.
முதலில் மக்கள் அன்றாடம் வெளிப்படுத்தும் 180 உணர்வுகளைப் பட்டியலிட்டு அவற்றுக்கான எமோஜிக்களை உருவாக்கினார் குரிடா. இப்போது இன்னும் பல நூறு எமோஜிக்கள் வந்துவிட்டன.
மொழி தேவையில்லை, பேசத்தேவையில்லை, நம்முடைய உணர்வுகளை எங்கோ இருக்கும் ஒருவருக்கு எமோஜு மூலம் கொண்டுசேர்த்துவிடலாம் என்பதே எமோஜிகளின் வெற்றியாக உள்ளது.