டெக்

53 வயது பெண்ணின் திசுவை 23 வயது ஆக்கும் மருத்துவம்... கேம்பிரிட்ஜின் சோதனை வெற்றி!

Sinekadhara

53 வயது பெண்ணின் தோல் செல்களை 30 வயது குறைத்து, 23 வயது தோற்றம்போல மாற்றி சாதனை படைத்திருக்கின்றனர் லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இந்த முறையை விவரித்து eLife இதழ் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த செயல்முறையானது மற்ற முந்தைய ஆராய்ச்சிகளின் முடிவைக் காட்டிலும் சிறந்ததாக இருப்பதாக கூறியிருக்கிறது.

இந்த ஆய்வை செய்த குழு பிபிசி -க்கு பேட்டியளிக்கையில், இதேபோன்று உடலின் மற்ற திசுக்களிலும் செய்ய முடியும் என்று தெரிவித்திருக்கிறது. நீரிழிவு, இதய நோய் மற்றும் நரம்பியல் நோய் போன்ற வயது தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைமுறையை உருவாக்குவதே இந்த ஆராய்ச்சியின் இறுதி நோக்கம். இந்த ஆராய்ச்சி முடிவில் பல சுவாரஸ்யமான முடிவுகளும் கிடைத்துள்ளன என்கிறார் பேராசிரியர் வுல்ஃப் ரெய்க். அதாவது மரபணுக்களை உருவாக்காமல் புத்துயிர் பெறும் மரபணுக்களை அடையாளம் கண்டுபிடித்து அவற்றை மேம்படுத்தி தோலின் வயதை குறைக்க முடியும் என்கிறார். இது முதுமையை குறைக்கும் என்கிறார் அவர்.

ஆரம்பக்கட்டத்திலுள்ள இந்த ஆராய்ச்சியின்மீது மீண்டும் பல ஆராய்ச்சிகள் செய்தால், மீளுருவாக்கம் செய்யும் மருந்துகளில் புரட்சியை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு டோலி செம்மறி ஆடுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட குளோனிங் முறையின் மேம்படுத்தப்பட்ட முறைதான் இந்த ஆராய்ச்சியிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

குளோனிங் தொழில்நுட்பம் மனித கரு ஸ்டெம் செல்களை உருவாக்குவதை மையமாக கொண்டு இயங்குகிறது. இதன்மூலம் தசை, குருத்தெலும்பு மற்றும் நரம்பு செல்கள் போன்ற குறிப்பிட்ட உடல் பாகங்களை அவற்றின் திசுக்கள்மூலம் உருவாக்கி பழைய உடல் பாகங்களை மாற்ற பயன்படுத்தப்படலாம். தற்போது லண்டன் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் முறையானது பழைய செல்களை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.