சந்திரயான் 3  Puthiyathalaimurai
டெக்

சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகநாடுகள்... ஏன் தெரியுமா?

உலகம் முழுவதும் உள்ள ஆண்டனாக்கள் சந்திரயான் திட்டத்தில் ஏன் பயன்படுத்தப்படுகிறது - விரிவாக பார்க்கலாம்....

webteam

சந்திரயான்-3 லேண்டரின் தொலைத் தொடர்புக்கு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையம் மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள ஏழு தொலைத் தொடர்பு நெட்வொர்க் மூலம் நகர்வுகளும் தரவுகளும் பெறப்பட்டும் அனுப்பப்பட்டும் வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள ஆண்டனாக்கள் சந்திரயான் திட்டத்தில் ஏன் பயன்படுத்தப்படுகிறது? விரிவாக பார்க்கலாம்.

chandrayaan 3

சந்திரயான் 3 திட்டம் செயல்படத் தொடங்கும் போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இதற்கான தொலைத்தொடர்பு உதவிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. பூமி கோள வடிவம் என்பதால் நிலவை நோக்கி இந்தியா இருக்கும் போது மட்டும் தான் நிலவில் இருந்து எந்த இடையூறுமின்றி தகவல்களை அனுப்பவும் பெறவும் முடியும். நிலவின் மறுபக்கம் இந்தியாவின் நிலை இருப்பின் தகவல்களை அனுப்புவது சிரமமாக இருக்கும். எனவே தான் இது போன்ற விண்வெளி திட்டங்களுக்கு உலக நாடுகள் இணைந்து தொலைத் தொடர்பு உதவிகளை செய்து வருகின்றன.

குறிப்பாக பூமியில் உள்ள அனைத்து ஆண்டனாக்களையும் பயன்படுத்தி அதன் மூலம் விண்கலத்துடன் தொலைத் தொடர்பு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சந்திரயான்-3 திட்டத்தில் ஜெர்மனி, பிரிட்டன், பிரெஞ்ச் கயானா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாசாவின் நெட்வொர்க் போன்றவை தொலைத் தொடர்பு நிலையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் சந்திரயானை தொலைத் தொடர்பு மேற்கொள்வதற்காக 32 மீட்டர் ஆன்டனாக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் பெறப்படுகிறது. மேலும் பெங்களூரில் உள்ள கட்டளை மையம் மூலமும் ரேடார் மூலமும் தகவல்கள் அனுப்பப்படுகிறது.

சந்திராயன் 3 ன் புதிய புகைப்படம்.

இந்நிலையில் பூமியில் உள்ள ஏழு கட்டுப்பாட்டு தொலைத் தொடர்பு மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சந்திரன் குறித்த அனைத்து நகர்வுகளும் துல்லியமாக தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. பூமியிலிருந்து அல்லது நிலவில் இருந்து ஒரு தகவல் அனுப்பி பெறுவதற்கு 1.3 வினாடிகளில் இருந்து 2.5 வினாடிகள் வரை ஆகிறது.

சந்திரயான் விண்கலம் பூமியில் இருந்து செல்லத் தொடங்கியதில் இருந்தே இந்த தொலைத் தொடர்பு மையங்கள் மூலம் அனைத்து விதமான நகர்வுகளும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் லேண்டர் மற்றும் ஆர்பிட்டரோடு தொலைத் தொடர்பு ஏற்படுத்தும் மையமாக ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ நோர்ச்சியா செயல்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரையிறங்கும் போது துல்லியமான தொலைத் தொடர்பு அவசியம் என்பதால் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ நோர்ச்சியா ஆண்டனாக்கள் சந்திரன் லேண்டருடன் அடுத்த மூன்று நாட்கள் தொலைத் தொடர்பில் இருக்கும் என கூறப்படுகிறது. சந்திரயான் மூலம் கிடைக்கப் போகும் தரவுகள் இந்தியாவிற்கு மட்டுமின்றி மனித குலத்திற்கே பயன்படும் என்பதால் உலக நாடுகள் இணைந்து உன்னிப்பாக விண்கலத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.