கடந்த சில மணி நேரங்களாக தமிழகம் முழுவதும் முடங்கிய ஜியோ வாய்ஸ் கால் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மணி நேரங்களாக தமிழகத்தில் முடங்கியிருந்த ஜியோ வாய்ஸ் கால் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால் அந்தச் சில மணி நேரங்களிலேயே ஜியோ முடங்கியது அதன் வாடிக்கையாளர்களை பாதித்துவிட்டது. அத்துடன் அது ஏன் முடங்கியது? மீண்டும் முடங்குமா? என வாடிக்கையாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக புதிய தலைமுறை இணையதளம் சார்பில் ஒரு வாடிக்கையாளராக ஜியோ உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது பதிலளித்த ஜியோ உதவி மைய பணியாளரிடம், ஏன் சேவை முடங்கியது எனக் கேட்டோம். அதற்கு பதிலளித்த ஜியோ பணியாளர், “கடந்த சில மணி நேரங்களாக தகவல் தொழில்நுட்ப சீரமைப்பு பணிகளில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில நெட்வொர்க் அப்டேட்களால் இந்தச் சிரமம் ஏற்பட்டுள்ளது. அது தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது” என்றார். அவரிடம் மீண்டும் சேவை முடங்குமா? என்று கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “தமிழகம் முழுவதுமே சேவையில் தடை ஏற்பட்டது உண்மைதான். ஆனால் இனி அதுபோன்று தடை ஏற்படாது” என்று கூறினார். அவர் கூறியது போலவே தற்போது ஜியோ வாய்ஸ் கால் வேலை செய்கிறது.
முன்னதாக ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே ஜியோ சிம் நிறுவனம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றது. அதற்குக் காரணம் அன்லிமிடெட் 4ஜி இணைய சேவை இலவசம் என்பதால்தான். ஜியோ சீக்கிரமாக வாடிக்கையாளர்களை சென்றடைந்ததற்கு காரணம் இலவச இணைய சேவை மட்டுமின்றி, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்ற வசதியும்தான். இந்நிலையில் ஜியோவில் ஏற்படும் சிக்னல் சிரமங்கள் மற்றும் சேவை முடக்கம் வாடிக்கையாளர்களை சிரமத்திற்கு ஆளாக்குகின்றது. அந்தக் குறைகளும் நீங்கினால் ஜியோ சேவை முற்றிலும் பயனுள்ளதுதான் என அதன் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.