இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன. இந்நிலையில்,
நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது இஸ்ரோ. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம். அது ஏன்? பார்க்கலாம்...
பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும்.
அப்போதுதான் பூமியின் சுழல் வேகமான 0.5 கிமீ/செகண்ட் கூடுதலாக கிடைக்கும் (நமக்கு தேவை 8 கி மீ/செகண்ட்). இவ்வாறு ஏவப்படும்போது ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கூட இந்த இடங்களில் இருந்து நம்மால் எளிதாக ஏவ முடியும்.
இந்தக் காரணத்திற்காக பல நாடுகள் வேறு கண்டங்களில் இருந்துகூட தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகின்றன. எடுத்துக்காட்டாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலங்கள் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகின்றன.
ஏவுகளங்களில் இருந்து பிரிந்து வரும் பாகங்கள் (உதாரணமாக சில பாகங்கள் ஏறக்குறைய 20 மீட்டர் நீளமும் 3 மீட்டர் விட்டமும் கொண்டவை) கடலில்தான் விழ வேண்டுமே தவிர மக்கள் வசிக்கும் நிலபரப்பின் மீது விழக்கூடாது. அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த விதி மிக முக்கியமானது.
இந்த விதியை கருத்தில் கொண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை நாட்டின் மீது விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் இஸ்ரோ. இதற்காக ராக்கெட்டுகள் 'Dogleg maneuver' எனும் முறையில் விண்ணில் ஏவப்படுகின்றன.
ஆனால் இந்த முறையில் ஏவும்போது எரிபொருள் அதிகமாக செலவாகும். எனவே புதிய ஏவுதளம் இலங்கை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், எரிபொருளையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி, ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும மேலும், அந்தப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது. புயல், மின்னல், மழையின் தாக்கமும் அங்கு குறைவாக இருக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினம் மேலே சொன்ன அனைத்து அம்சங்களையும் கொண்ட ஓர் இடமாக உள்ளது. எனவேதான் இஸ்ரோ இதைத் தேர்வு செய்துள்ளது.
1) ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரபட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது அதிகளவில் எரிபொருள் மிச்சமாகும். அதோடு, ராக்கெட்டின் வேகத்தை நொடிக்கு அரை கிலோ மீட்டர் வீதம் அதிகரிக்க முடியும்.
2) வழக்கமாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை மீது பறந்துவிடாமல் இருக்க அல்லது ராக்கெட்டுகளில் இருந்து பிரிந்து விழும் பாகங்கள் இலங்கை மீது விழாமல் இருக்க, கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், தென் துருவம் நோக்கித் திருப்பப்படுகிறது.
ஆனால், குலசேகரபட்டினத்தில் இருந்து ஏவும்போது இந்த பிரச்னை எழாது. ராக்கெட்டுகள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இது இஸ்ரோவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3) திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இஞ்ஜினின் எரிபொருளான திரவ ஹைட்ரஜனும், கேரள மாநிலம் தும்பாவில் ராக்கெட் பாகங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.
அங்கிருந்து வெகு தொலைவில், ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் கால தாமதம், பாதுகாப்பு பிரச்னை, கூடுதல் செலவு, சேதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், மகேந்திரகிரி மற்றும் தும்பாவுக்கு ஓரளவு அருகில் குலசேகரப்பட்டினம் இருப்பதால் இந்த பிரச்னைகளும் ஏற்படாது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவு வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான 6.24 கோடி மதிப்பிலான இடென்டரை இஸ்ரோ கோரியுள்ளது.
மூன்று மீட்டர் உயரத்தில் கற்களினால் ஆன சுற்றுச்சுவர் கட்டப்பட வேண்டும் என்றும் உலகத் தரம் வாய்ந்த ராக்கெட் ஏவுக வளாகம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவை விட பூமத்திய ரேகைக்கு சற்று அருகில் குலசேகரப்பட்டினம் உள்ளது. எனவே கணிசமான எரிபொருளை சேமிக்க முடியும் என்பதால் ராக்கெட் ஏவுவதற்கான செலவு மிச்சமாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தும்போது தென்கிழக்கு திசையை நோக்கி சென்று இலங்கை வரை இதனுடைய தாக்கம் ஏற்படும். வெளிநாடுகளின் எல்லைகளில் ராக்கெட் பயண தாக்கம் இருக்கக்கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன.
இந்தவகையில் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் பல பிரச்னைகள் தடுக்கப்படும்.
குலசேகரபட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் தெற்கு திசையை நோக்கி சில கட்டுப்பாடுகளோடு விண்வெளியில் செலுத்த முடியும். தற்போது ராக்கெட்டுக்கு தேவைப்படும் திரவ எரிபொருள், இங்கிருந்து மிக அருகில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையத்தில் இருந்து 1,497 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றப்படுகிறது.
குலசேகபட்டினத்தில் ஏவுதளம் அமையும்போது, 100 கிலோ மீட்டர் தொலைவுக்கும் குறைவாக எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரிகிரியில் இருந்த நேரடியாக கொண்டு செல்ல முடியும் என்பதால் பெரும் செலவு மிச்சமாகும்.
தற்போது சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மற்றும் தனியார் ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்புவதற்கு குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வருங்காலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகர்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்வெளிக்கு செலுத்த முடியும்.
மொத்தமாக இரண்டு வருடத்தில் குலசேகரபட்டின ஏவுதள பணிகள் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. முதல் கட்டமாக 11 மாதத்திற்கான காம்பவுண்ட் சுவர் மற்றும் SSLV வளாகம் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மொத்தமாக 2376 ஏக்கர் நிலப்பரப்பில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான திட்டம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் டிட்கோ இதுவரை 100 சதம் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த வருடம் பாதுகாப்புத்துறை மற்றும் விண்வெளி துறைக்கான கொள்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் ஏற்கெனவே இஸ்ரோவிற்கான உந்துவிசை மற்றும் திரவ எரிபொருள் மையம் அமைந்துள்ள நிலையில், அதையும் குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள புதிய ஏவுதளத்தையும் காரிடார் மூலம் இணைத்து, அதன் மூலம் மாநிலத்தின் புத்தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளையும் விண்வெளி துறையில் முதலீடு செய்வதற்கான சூழலையும் அமைப்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளது தமிழ்நாடு அரசு.