பூமராங் வீடியோ வசதியை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது
உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது.
குறிப்பாக நண்பர்களுடன் அரட்டை, குரூப்கள் தொடங்கப்பட்ட அரட்டை என வாட்ஸ் அப் ஒரு அரட்டை தளமாகவும் இயங்கி வருகிறது. பயனாளர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்டுகளை விடுத்து வருகிறது
இந்நிலையில் பூமராங் வீடியோ வசதியை விரைவில் வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது. பூமராங் வீடியோ வசதி தற்போது இன்ஸ்டாகிராமில் உள்ளது. இன்ஸ்டாவில் பலராலும் பயன்படுத்தப்படும் பூமராங் வீடியோ வாட்ஸ் அப்பிலும் பயனாளர்களை கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
7 நொடிகளுக்குள் அடங்கும் பூமராங் வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பலாம் என்றும், வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்துக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் iOS பயனாளர்களுக்கு இந்த வசதி வரும் என்றும் அதற்கு பின்னர் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.