பயன்பாட்டாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான “குரூப் வீடியோ கால்” அப்டேட்டை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோரின் பொழுதுபோக்காக சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்றவை உலக அளவில் அதிக பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் அனைவருமே வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களாக உள்ளனர் எனக் கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியாவில் வாட்ஸ் அப் ஆதிக்கம் செலுத்துகின்றது.
வாட்ஸ் அப் கண்டுபிடிக்கப்பட்டது 2009ஆம் ஆண்டு. ஜான் கோம் மற்றும் ப்ரைன் அக்டான் என்ற இரு அமெரிக்கர்கள் இணைந்து வாட்ஸ் அப்பை கண்டுபிடித்தனர். இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. ஆண்டாராய்டு, ஐபோன், விண்டோவ்ஸ் போன் உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும்.
சில நாடுகளில் மட்டும் இந்தச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பை 2014 பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதன்பிறகு வாட்ஸ் அப்பில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்பிறகு தொடர்ச்சியாக பயன்பாட்டாளர்களின் வசதிக்கேற்ப பல அப்டேட்கள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து விதமான பயன்பாட்டாளர்கள் இதனை 2.18.189 என்ற வெர்ஷனை அப்டேட் செய்து பெற முடியும். ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் ப்ளே ஸ்டோரிலும், ஐபோன் பயன்பாட்டாளர்கள் அப் ஸ்டோரிலும் இதனை அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால் சில பயன்பாட்டாளர்களுக்கு இந்த அப்டேட் காண்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பயன்படுத்துவது எப்படி?
வழக்கமாக நீங்கள் வாட்ஸ் அப் மூலம் கால் செய்வதை போலவே அழைக்க வேண்டும். அவர்கள் உங்கள் அழைப்பை எடுத்த பின்னர், உங்கள் திரையின் வலது பக்க மேல் மூலையில் மற்றோரு அழைப்பை இணைக்கும் ஆப்ஷன் காண்பிக்கும். அதன்மூலம் நீங்கள் மேலும் ஒரு நபரை இணைக்கலாம். இவ்வாறு மூன்று பேர் வரை உங்களால் இணைக்க முடியும். அதன்படி, மொத்தம் நான்கு நபர்கள் ஒரே நேரத்தில் குரூப் வீடியோ அல்லது ஆடியோ காலில் பேசமுடியும். ஆரம்பக்கட்டத்தில் 4 பேர் பேசும் அளவிற்கு அப்டேட்டை வெளியிட்டுள்ள வாட்ஸ் அப், பின் நாட்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளது.