ஒரு நாளைக்கு சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் ரீகால் வசதி விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தினந்தோறும் புதுப்புது அப்டேட்களை வழங்கிவருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் அனுப்பிய குறுந்தகவல்களை ரீகால் செய்யும் வசதிக்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த சோதனை வெற்றி அடைந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
ரீகால் வசதி ‘டெலிட் ஃபார் எவ்வரி ஒன்’ என்ற பெயரில் வெளிவரவுள்ளது. ரீகால் பட்டன் மூலம் வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசெஜ்களை டெலிட் அல்லது திரும்ப பெறும் வசதியை வாட்ஸ்அப் பயனர்கள் பெற முடியும். ரீகால் வசதிக்கான பீட்டா வெர்ஷன் தற்போது சோதனையில் உள்ளது. சோதனை முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் பிறருக்கு அனுப்பபட்ட டெக்ஸ்ட் மட்டுமின்றி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட ஜிஃப், வீடியோ, புகைப்படம், டாக்குமென்ட் உள்ளிட்டவற்றை அழிக்க முடியும். எனினும் அனுப்பப்பட்டு ஐந்து நிமிடம் வரை மட்டுமே அவற்றை அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.