வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது புதிய கொள்கைகளை பயனாளர்களை ஏற்க செய்ய தந்திரமான வேலைகளில் ஈடுபடுவதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய கொள்கைகள் தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது புதிய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறு பயனாளர்களுக்கு தினந்தோறும் செயலியில் அறிவிப்பு அனுப்பி வருவதாகவும் இத்தகைய உத்திகள் மூலமாக தங்களது கொள்கைகளை பயனாளர்கள் ஏற்கும்படி அந்நிறுவனம் கட்டாயப்படுத்துவதாகவும் அரசு கூறியுள்ளது.
இதனை தடுக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. அரசு கொண்டு வந்திருக்கும், தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக வாட்ஸ்அப் நிறுவனம் அனைத்து பயனாளர்களையும் தங்களது புதிய கொள்கைகளை ஏற்க வைக்கும் நோக்கில் இவ்வாறு செயல்படுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.