டெக்

சந்திரயான் 2- ஆர்பிட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

சந்திரயான் 2- ஆர்பிட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

webteam

சந்திரயான் திட்டத்தை பொறுத்தவரை ஆர்பிட்டருக்கு பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு எத்தனை பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, லேண்டரின் பணி என்ன, எத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும் என்பன குறித்து பார்க்கலாம். 

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை நிலவுக்கு அருகே கொண்டு செல்வது மட்டுமே ஆர்பிட்டரின் பணி அல்ல. அதையும் கடந்து நிலவை சுற்றி வந்தபடி பல்வேறு ஆய்வுகளை இது மேற்கொள்ளவிருக்கிறது. 2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஒரு வருடம் ஆகும். நிலவை 100 கிலோ மீட்டர் வட்டப்பாதையில் சுற்றி வந்து புகைப்படங்களை எடுத்து அனுப்புவது இதன் முக்கியமான பணி. 

இதில் முக்கியமான 8 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. டெரைன் மேப்பிங் கேமரா, நிலவின் தரையை துல்லியமாக படமெடுத்து அனுப்பும். கிளாஸ் என பெயரிடப்பட்ட ஸ்பெக்ட்ரோ மீட்டர், நிலவில் மெக்னீசியம், அலுமினியம், சிலிகான், கால்சியம், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும். சோலார் மானிட்டர் நிலவில் சூரிய கதிர்வீச்சின் அளவை கண்காணிக்கும். 

ஆர்பிட்டர் High resolution கேமரா நிலவின் தளத்தை மிகத்துல்லியமாக படம் எடுத்து அனுப்பும். இமேஜிங் ஐ.ஆர் ஸ்பெக்ட்ரோ மீட்டர் நிலவின் தண்ணீர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கான உள்ளீடுகளை அளிக்கும். டி.எஃப்.எஸ்.ஏ.ஆர் என்ற கருவி நிலவின் துருவ பகுதிகள் குறித்த வரைபடத்தை உருவாக்க உதவும். சேஸ் 2 என்ற கருவி நிலவின் புறவெளி மண்டலம் குறித்தும் டி.எஃப்.ஆர்.எஸ் அமைப்பு நிலவின் அயன மண்டலத்தையும் ஆய்வு செய்யும்.