சமீபத்தில் மே 11ம் தேதி சூரியனிலிருந்து வெளிப்பட்ட காந்த புயலை ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பியிருந்தது. சூரியனிலிருந்து வெளிவரும் இந்த காந்தபுயலின் தாக்கம் என்னவாக இருந்தது? அதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை முதுநிலை விஞ்ஞானியும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் அவர்களிடத்தில் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில் என்னவென்று பார்க்கலாம்.
”இந்த மே மாத துவக்கத்திலிருந்து சூரிய புயலானது அதிகப்படியாக வீசி வருகிறது. சூரியனுக்கு மேல் AR 13664 என்ற பகுதியிலிருந்துதான் சூரியபுயல் மிக அதிகமாக தோன்றியது. கடந்த 2003-க்கு பிறகு ஏற்பட்ட கடுமையான சூரியபுயல் இது. இதனால் தகவல்தொழில்நுட்பம் gps பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்தமாதிரி சூரிய புயலின் காரணமாக புவிகாந்த புயல் (Geomagnetic storm) மே 11ம் தேதி அதிவேகத்தில் வீசியது. பொதுவாக சூரியனிலிருந்து வெளிப்படும் சூரியகாற்றில் பல்வேறுவிதமான மின்னேற்றம் கொண்ட துகள்கள், எலக்ட்ரான், புரோட்டான், ஆல்ஃபா கதிர்கள் போன்ற கலவைகள் காந்தபுலம் கொண்டவையாக இருக்கும். இதை ப்ளாஸ்மா என்று சொல்லுவார்கள். சூரியபுயலின் போது இந்த ப்ளாஸ்மா அதீத வேகத்துடன் செரிவுடனும் வெளிவரும். இது ஒருபுறம் இருக்கட்டும்.
பூமியை எடுத்துக்கொண்டால், பூமியின் மேற்புறம் வளிமண்டலம் இருக்கிறது, அதன் மேற்புறம் அயனோஸ்பியர் என்ற அயனிமண்டலம் இருக்கிறது. இத்தகைய சூரியபுயல் பூமியின் மீது மோதும் பொழுது, அயனி மண்டலமானது சூரியபுயலை தடுக்கிறது. அதையும் மீறி சூரியபுயலின் சில கதிர் துகள்கள் பூமிக்குள் நுழையும் பொழுது, உயர் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளுடன், ப்ளாஸ்மா இணைந்து வினையாற்றும். இதுதான் மே 11ம் தேதி நடந்தது. அச்சமயம் தான் துருவ ஒளியானது இரவு நேரங்களில் பலப்பகுதிகளில் வெளிப்பட்டது.
இயல்பாக சூரிய காற்றானது சூரியனின் வடதுருவம், தென் துருவம் இப்பகுதிகளில் நுழையும் பொழுது, அது பூமியின் காற்றோடு வினைபுரிந்து பல்வேறு நிறங்களை தோற்றுவிக்கும். இதுதான் துருவ ஒளி என்று பெயர். இது நீலம், பச்சை, பிங்க்... போன்ற நிறங்களில் தெரிந்தது.
சூரியபுயலால் பாதிப்பு என்ன என்று பார்த்தால், இது, கண்ணுக்குதெரியாத பாதிப்பை ஏற்படுத்தியது. மின் விநியோகம், தகவல் தொழில்நுட்பம் gps பாதிப்பு இது எல்லாம் நடைப்பெற்றது. விண்வெளியிலும் சில தாக்கங்கள் நடைப்பெற்றது.
இதில் இரண்டு விதமான கருவி இருக்கிறது . இதில் ஒன்று ஆதித்யா விண்கலத்தை சுற்றி இருக்கக்கூடிய வானிலை பற்றிய தகவல் சேகரிப்பு, மற்றொன்று சூரியனை பற்றிய ஆராய்ச்சி. இதில், சூரிய புலயானது ஆதித்யா எல்1 ஐ கடக்கும் பொழுது எந்த வேகத்துடன் வந்தது எத்தனை முறை வந்தது என்ற தகவலை சேகரித்து வைத்தது.
ஆதித்யாவில் உள்ள இரண்டாவது கருவி, தொலைவில் இருந்து சூரியனின் மேற்புறத்தில் நடக்கின்ற மாற்றங்களை எக்ரே தொலைநோக்கியின் மூலம் பதிவு செய்தது. அதன்படி சூரிய புயலின் போது சூரியனின் மேற்புறத்தில் தோன்றிய வெடிப்புக்கள், புயல்கள் போன்றவற்றை பதிவு செய்தது.
சந்திரயான் 2 ஆர்பிட்டரை வைத்து பூமிக்கு அருகில் வந்த சூரியபுயலின் விளைவின் தகவல்கள் என்ன என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் தரவுகளை சேகரித்து வைத்துள்ளனர். எதிர்காலத்தில் விண்வெளி வானிலை குறித்த கருத்தை உருவாக்க இருக்கிறார்கள்.
விண்வெளியில் உள்ள இரண்டு முக்கிய பாதிப்பு செயற்கைகோளில் உள்ள மின்னனு கருவி மீது மின்னேற்றம் பெற்ற துகள்கள் படியும் போது செயற்கைகோளில் பாதிப்பு ஏற்படும். இஸ்ரோ இண்சாட் 3DS, இண்சாட் 3DR என்ற கருவிகளின் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளது. அதே போல் நமது 30 செயற்கைகோள் புவிநிலைப்பாதையில் உள்ள எதுவும் பாதிப்பு அடையவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆற்றல் மிகுந்த மின் துகள்கள் நுழையும் பொழுது வளிமண்டலம் சூடேரி விரிவடைந்து, விண்வெளி செயற்கைகோள் உயரம் குறையும். இதை பாதை இழப்பு என்பார்கள். EOS07 என்ற விண்கலம் 430 கி.மீ உயரத்தில் பறந்து வருகிறது. 300 மீட்டர் இயல்பாகவே அது பாதை இழப்பை சந்திக்கும். மே 11 600 மீட்டராக உயர்ந்தது.
கார்டோசாட் 2S என்று சொல்லக்கூடிய விண்கலம் 505 கி.மீ உயரத்தில் பறந்து வருகிறது . 35, 40 மீ வரை பாதை இழப்பு 180 மீட்டர் பாதை இழப்பு ஏற்பட்டது, 5 லிருந்து 6 மடங்கு பாதை இழப்பு ஏற்பட்டது. ஆனாலும், எந்த செயற்கைகோளுக்கும் பாதிப்பில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கீழே இஸ்ரோ வெளியிட்டுள்ள பாதை இழப்பு குறித்த அட்டவணை