sathya nathella, AI PT
டெக்

இந்திய பொருளாதாரத்தில் 500பில்லியன் உற்பத்தியை AI ஈட்டும்! புதிய டிஜிட்டல் கட்டமைப்பும், சவால்களும்!

இந்திய பொருளாதாரத்தின் இலக்கு 5 டிரில்லியனாக இருக்கும்பட்சத்தில் அதில் 10% உற்பத்தியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI ஈட்டித்தரும் என்று மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

உலக அறிவியல் வளர்ச்சியின் புதிய வடிவமாக உருவெடுத்துள்ளது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். உலக மக்களின் தேவை அனைத்தையும் விரல் நுனியில் கொண்டுவந்து கொட்டும் அதிநவீன கண்டுபிடிப்பான AI மீது அனைவரது பார்வையும் விழுந்துள்ளது.

முதலில் AI மனிதர்களின் வேலையை சுலபமாக்க உருவாக்கப்பட்டாலும், அதன் அபரிமிதமான வளர்ச்சியானது ஒரு கட்டத்தில் ஹெல்த்கேர், ரொபோடிக்ஸ், கணினி மொழிகள், மரணத்தை கணிப்பது என கண்டுபிடிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே மனிதர்கள் பயன்படுத்தும் முக்கியமான வேலைகளின் ஒரு பகுதியாகவே மாறிவருகிறது.

Deepfake AI Tech

முதலில் இந்த தொழில்நுட்பம் மனித குலத்திற்கு எதிராக மாறிவிடுமோ என்கிற அச்சம் உலக நாடுகளுக்கு இருந்தாலும், அதை களையும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் செயற்கை நுண்ணறிவு நன்மைக்கே என்கிற தலைப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் உலகின் தலைசிறந்த 9 செயற்கை நுண்ணறிவு ரோபோக்களும் அதனை உருவாக்கியவர்களும் பங்கேற்றனர். இந்த சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு குறித்த சந்தேகங்கள் ரோபோக்களிடமே நேரடியாக கேட்கப்பட்டன.

அத்தகைய கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பதிலளித்து பேசிய பேச்சுயாவும், பிரம்மிப்பூட்டும் வகையில் இருந்தன. முதல் செய்தியாளர் சந்திப்பிலேயே ரோபோக்களின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அதில் ஒரு ரோபோ, “மனிதர்களை விட எங்களால் உலகை சிறப்பாக இயக்க முடியும்” என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

AI robots UN conference

என்னதான் AI மீதான கவனம் உலகம் முழுவதும் திரும்பினாலும் இதன்வளர்ச்சி அதிகப்படியான மனித வேலைவாய்ப்பை பறிக்கும் என்ற எச்சரிக்கையை பல்வேறு பெருநிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் எச்சரித்தனர். முதலில் இந்திய அரசு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது AI தொழில்நுட்பம் சார்ந்த பள்ளி, கல்லூரி படிப்பை கொண்டுவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 5 ஆண்டுகளில் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இந்தியா எதிர்நோக்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக “ADVANTA(I)GE INDIA” எனப்படும் திட்டம் மூலம் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 2 மில்லியன் மக்களுக்கு AI திறன்களை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஒ சத்யா நாதெல்லா இதனை மும்பையில் நடைபெற்ற தொழில்துறை சார்ந்த நிகழ்வில் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்-ஏஐ இணைந்து செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

“ADVANTA(I)GE INDIA” திட்டத்தின் இலக்கு என்ன?

மைக்ரோசாப்ட் கடந்த வாரம் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன்களைக் கொண்டு பயிற்சியளிக்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 2 மில்லியன் மக்களுக்கு AI திறன்களை வழங்க மைக்ரோசாப்ட் உதவும் என்று மும்பையில் புதன்கிழமை நடந்த ஒரு நிகழ்வில் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறினார்.

AI Education

அரசாங்கங்கள், இலாப நோக்கமற்ற பெருநிறுவனங்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து வழங்கப்படும் இந்த பயிற்சி, எதிர்கால பணியாளர்கள் AI-ன் திறனைப் முழுமையாக பயன்படுத்துவதற்கு உதவும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.

மேலும் டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற பெரிய மாநாரகங்களை தாண்டியும், சிறிய மக்கள்தொகை கொண்ட வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் பயிற்சி அளிப்பதை இந்த திட்டம் கவனம் செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. கீழடுக்குகளில் உள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படும் AI பயன்பாடே வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.

“ADVANTA(I)GE INDIA” திட்டத்தின் பகுதியாக, "மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியாக 5 லட்சம் மாணவர்கள், வேலை தேடுபவர்கள் என இரண்டு பேருக்கும் AI-ன் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சியும், 1 லட்சம் இளம் பெண்களுக்கு "ஆழமான AI தொழில்நுட்ப திறன் பயிற்சி" மற்றும் தொலைதூர மற்றும் பழங்குடி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களுக்கு AI தொழில் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்" முதலிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 2 மில்லியன் மக்களுக்கு AI திறன்களை வழங்க மைக்ரோசாப்ட் உறுதிசெய்துள்ளது.

500 மில்லியன் உள்நாட்டு உற்பத்தியை AI உண்டாக்கும்!

இந்தியாவின் உள்கட்டமைப்பை மாற்றுவதில் AI பெரிய பங்காற்றும் என கூறியிருக்கும் சத்யா நாதெல்லா, “AI போன்ற ஒரு புதிய பொதுநோக்கு தொழில்நுட்பம் உங்களிடம் இருந்தால், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று நான் கூறுவேன். AI தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் பயன்படுத்த இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. பொதுத்துறை, தனியார் துறை, சுகாதாரம் என இருக்கும் பலதுறைகளிலும் உங்களால் இதன் பயன்பாட்டை பெற்றுக்கொள்ளமுடியும். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட எல்லாத் துறைகளிலும் அதன் சொந்த AI தயாரிப்புகளை உருவாக்கி, அவற்றை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவிற்கு நாங்கள் துணை விமானியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று ஷெரீன் உடனான இண்டர்வியூவில் தெரிவித்தார்.

satya nadella

மேலும் இந்திய பொருளாதாரத்தில் AI பங்கு எப்படியிருக்கும் என கூறிய அவர், “இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியனாக இருக்கப்போகிறது என்றால், அதில் AI-ன் பங்கானது நிச்சயம் 10% அதாவது 500 பில்லியனாக இருக்கும்” என்று குறிப்பிட்ட நாதெல்லா, லண்டனில் ரயில்வே துறையில் AI துறையால் மேம்பட்ட உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டு கூறினார். மேலும் AI இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகநாடுகளின் பணவீக்கத்திற்கும் பதிலாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு இருக்கும் சவால்கள் என்ன?

இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகநாடுகள் மற்றும் பல்வேறு பெருநிறுவன அதிகாரிகளின் கவலையாகவும் இருப்பது, AI தொழில்நுட்பத்தால் அதிகப்படியான மனித வேலைப்பறிப்புகள் இருக்கும் என கூறப்படுவது தான். அது ஒருபுறம் இருக்க தற்போது தான் தொடக்க அளவில் இருக்கும் AI கல்விமுறை கொண்டு, மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதிசெய்வதற்கான பொறுப்பும் அரசிற்கு இருக்கிறது.

satya nadella

AI தொழில்நுட்பத்தால் வேலைபறிபோவது குறித்து பேசியிருந்த நாதெல்லா, “நிச்சயம் வேலைபறிப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றை ஒரு புதிய மாற்றத்தின் சமநிலையாக தான் பார்க்கவேண்டும். வேலைபறிப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்பு இரண்டிற்குமான சமநிலையை உறுதிசெய்ய வேண்டும். சில திட்டங்களை செயல்படுத்துவன் மூலம் இது முற்றிலும் ஆரோக்கியமானதாக மாறும்” என நம்புவதாக தெரிவித்தார்.