டெக்

அடுத்த உருமாற்றம்... கருத்து பரிமாறும் தளமாக 'ட்விட்டர் SPACES'

அடுத்த உருமாற்றம்... கருத்து பரிமாறும் தளமாக 'ட்விட்டர் SPACES'

jagadeesh

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் விவாதங்களையும் உரையாடல்களையும் ஜனநாயகப்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல. அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது ட்விட்டர் SPACES.

உலகின் பல கோடி பேரின் கருத்துகளையும் செய்திகளையும் உள்ளங்கையில் அடக்கி வைத்திருக்கும் வலைத்தளம் ட்விட்டர். உலக தலைவர்கள் தொடங்கி உள்ளூர்வாசிகள் வரை தங்களது கருத்துகளையும் செய்திகளையும் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும் தளமாக உருவெடுத்து ஆண்டுகள் பல கடந்த பின், இதனை மேலும் உருமாற்ற உருவாக்கப்பட்டுள்ள பயன்பாடு தான் SPACES.

240 எழுத்துகளுக்குள் மட்டுமே சுருண்டிருந்த ட்விட்டர் பயன்பாட்டை, பல ஆயிரம் பேரை கொண்டு கருத்து பரிமாறும் தளமாக பரிணமிக்க வைத்துள்ளது ட்விட்டர் SPACES. பொது பிரச்சனைகள், சர்ச்சைகள் தொடங்கி உலக பிரச்சனைகள் வரை அனைவரையும் உரையாட வைத்து தெளிவு பெற உதவுகிறது இந்த SPACES என்கின்றனர் பத்திரிகையாளர்கள்

கொரோனா பரவலால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில், மனம் சார்ந்த பிரச்னைகளிலிருந்து வெளிவந்து உரையாட வைக்கிறது SPACES. கொரோனா குறித்த விழிப்புணர்வு, பொது மக்கள் தடுப்பூசி போடுவது குறித்த அச்சத்தை போக்குவது, பொழுதுபோக்கு, சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் இதில் விவாதிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்களது கருத்துகளை ஒரே நேரத்தில் பல நூறு பேரிடம் கொண்டு சேர்க்க இதன்மூலம் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஒரு தலைப்பை தேர்வு செய்து சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஆரோக்கியமான கருத்துகளை பரிமாற்றம் செய்ய உதவுகிறது. தவிர SPACES ஐ ஒருங்கிணைக்கும் நபர்களுக்கு மட்டுமே யாரை பேச அனுமதிக்க வேண்டும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. சில நாட்களில் யூடியூப் போன்று SPACES ஐ ஒருங்கிணைக்கும் நபர்கள் கட்டணத்தை நிர்ணயித்து ஒரு பாதியை தாங்கள் எடுத்து கொள்வதற்கான வசதியையும் ட்விட்டர் உருவாக்க உள்ளது.