டெக்

”அனைவரும் முகக்கவசம் அணிந்தால் எடிட் ஆப்ஷன் தருவோம்” - ட்விட்டர் நிறுவனம்!

”அனைவரும் முகக்கவசம் அணிந்தால் எடிட் ஆப்ஷன் தருவோம்” - ட்விட்டர் நிறுவனம்!

webteam

எல்லாரும் மாஸ்க் அணிந்தால் எடிட் ஆப்ஷன் தருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு ட்விட்டர்வாசிகள் பலரும் நகைச்சுவையாக எதிர்க்கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் ஆகியவை முக்கிய இடத்தில் உள்ளன. சமூக வலைத்தளங்கள் பயனாளர்களைக் கவர்வதற்காகவும் பயன்படுத்த எளிதாகவும் அடிக்கடி அப்டேட் கொடுத்து வருகின்றனர். பேஸ்புக், இன்ஸ்டாவில் நீங்கள் ஏதேனும் பதிவிட்டு பிறகு அதில் மாற்றம் செய்யப்பட்ட வேண்டுமென்றால் எடிட் ஆப்ஷன் சென்று எடிட் செய்து கொள்ளலாம். ஆனால் பலதரப்பட்ட அப்டேட்களை விடும் ட்விட்டர் எடிட் ஆப்ஷனை மட்டும் தரவில்லை.

உங்களது ட்வீட்டில் ஏதேனும் தவறு என்றால் அதனை நீக்கிவிட்டு புதிதாகத்தான் ட்வீட் செய்ய வேண்டுமே தவிர எடிட் செய்ய முடியாது. பயனாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எடிட் ஆப்ஷனை கொடுக்கவில்லை. எடிட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டால் பதிவுகளின் உண்மைத்தன்மை போய்விடும் என்ற கருத்தை ட்விட்டர் கூறி வருகிறது. இந்நிலையில் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், அனைவரும் மாஸ்க் அணிந்துவிட்டால் நீங்கள் எடிட் செய்யும் வசதியைப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் இந்த மறைமுகமான கிண்டல் பதிவுக்குப் பதில் அளித்துள்ள பலரும், ''பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அனைவரும் மாஸ்க் அணிவது நடக்காததாக இருக்கிறது. அப்படியானால் நீங்களும் எடிட் ஆப்ஷன் கொடுப்பது நடக்காத ஒன்று'' என்றும் ''எடிட் ஆப்ஷன் கிடைக்காது என்பதை மறைமுகமாகச் சொல்லிவிட்டீர்கள்'' என்றும் பதிவிட்டு வருகின்றனர்.