ட்விட்டரில் எடிட் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்
செய்திகள் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளங்களில் பேஸ்புக்கும், ட்விட்டரும் முன்னணியில் இருக்கின்றன. பல்வேறு செய்திகளும் உடனக்குடன் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி விடுகிறது. இது ஆரோக்யமான விஷயம் என்றாலும் பல நேரங்களில் போலி செய்திகளும் வேகமாக பரவி விடுகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளை எப்படி தடுப்பது என்பது குறித்தே அரசுகளும் சமூக வலைதள நிர்வாகங்களும் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி கடந்த 9ம் தேதி இந்தியா வந்தார். அவரின் முதல் இந்தியப் பயணத்தின் முக்கிய பகுதியாக டெல்லி ஐ.ஐ.டி-யில் மாணவர்களிடையே நேற்று உரையாற்றினார். மாணவர்கள் உடனான இந்த சந்திப்பில் வாக்களிப்பின் முக்கியத்துவம் என்ன, சமூக வலைதளங்களில் போலிச் செய்திகளைத் தடுப்பது எப்படி, சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கு எத்தனை முக்கியமானது, தன்னுடைய நிறுவனத்தில் தான் சாதித்தது எப்படி போன்ற பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இது தொடர்பான கேள்விகளை ட்விட்டரில் #PowerOf18 என்ற ஹேஷ்டேக்குடன் மக்கள் அவரிடம் கேட்டறிந்தனர். ஹேஸ்டேக்கில் குறிப்பிடப்பட்ட 18 என்பது வாக்குரிமையின் முக்கியத்துவத்தை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ட்விட்டரில் எடிட் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் எடிட் வசதியை தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும், எடிட் வசதியை அறிமுகப்படுத்த தங்கள் நிறுவனம் அவசரப்படவில்லை என்றும் ஆனால் எடிட் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்