டெக்

ஒரு மணி நேரத்திற்குமேல் சிறுவர்கள் பயன்படுத்தினால் ஸ்டாப் ஆகும்! டிக்டாக் நிறுவனம் அதிரடி

ஒரு மணி நேரத்திற்குமேல் சிறுவர்கள் பயன்படுத்தினால் ஸ்டாப் ஆகும்! டிக்டாக் நிறுவனம் அதிரடி

webteam

டிக்டாக் செயலியில் சிறுவர்கள் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது டிக்டாக் நிறுவனம்.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது டிக்டாக் செயலி. இந்த செயலி, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், பல நாடுகளில் டிக்டாக் பிரபலமான செயலியாக வலம்வந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே டிக்டாக் செயலியில் சிறுவர்கள் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது டிக்டாக் நிறுவனம். அதன்படி, டிக்டாக் செயலியில் பயனர்களாக இருக்கும் 18 வயதிற்குட்பட்டோருக்கு தினசரி நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் டிக்டாக் செயலியை ஒருநாளில் 60 நிமிடங்களுக்கு மேல் பார்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 60 நிமிடங்களை எட்டும்போது டிக்டாக் செயலி தானாக 'லாக்' ஆகிவிடும். அதற்குமேல் பார்க்க விரும்பினால் பாஸ்கோடை  உள்ளீடு செய்ய வேண்டியதிருக்கும். அப்படி பாஸ்கோடை  உள்ளீடு செய்தாலும்கூட கூடுதலாக 30 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும்.

இதன்மூலம் சிறுவர்கள் டிக்டாக் செயலியில் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதை தவிர்க்க முடியும் என  டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் மனநல நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என்றும் டிக்டாக் அறக்கட்டளை மற்றும் பாதுகாப்புத் தலைவர் கோர்மக் கீனன் தெரிவித்துள்ளார்.