நடக்க முடியாத முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்களுக்காக கோவையை சேர்ந்த மூன்று மாணவர்கள் தானாகவே இயங்கும் நான்கு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளனர்.
வயது வந்தால் ஒரு சிலருக்கு நடக்க முடியாத நிலை ஏற்படும். இதேபோல கால்களின் செயல்பாடு குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் சக்கர நாற்காலி தேவைப்படும். பெரும்பாலான சக்கர நாற்காலியை பின்னிருந்து ஒருவர் தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும். இதனால் சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்கள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும். ஒரு சில சக்கர நாற்காலிகளை நாமாகவே இயக்கிச் செல்ல முடியும். அவற்றிற்கும் நம் கைகள் அல்லது கால்களின் இயக்கம் தேவை. இதனையும் கூட சில மாற்றுத் திறனாளிகளால் அவ்வளவு எளிதில் செய்ய முடிவதில்லை.
இந்நிலையில் நடக்க முடியாத முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்கள் மிக எளிமையாக பயன்படுத்தும் வகையில் தானாகே இயங்கும் நான்கு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளனர் கோவை அம்ரிதா விஸ்வா வித்யாபீடம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள். ‘செல்ப்- ஈ’ என அழைக்கப்படும் இந்த சக்கர நாற்காலியில் ஒரு இடத்தில் மற்ற இடத்திற்கு செல்ல அவர்கள் எந்த வேலையையும் செய்யத் தேவையில்லை. நாற்காலியில் பொருத்தப்பட்டுள்ள ரோபோட்டிக் ஆபரேடிங் சிஸ்டம், நாற்காலி தானாகவே இயங்க உதவுகிறது. இதனால் அவர்களால் எந்தவித சிரமமுமின்றி பயணம் செய்ய முடியும். இதுமட்டுமின்றி இடையில் ஏதாவது தடைகளோ அல்லது மக்களோ இருந்தால் அதில் மோதாமல் அதற்கேற்றவாறு இந்த சக்கர நாற்காலி பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வீல் சேர்களைபோல் அல்லாமல் வணக ரீதியாக வெற்றிகரமாக விற்பனைக்கு வரும்பட்சத்தில் ‘செல்ப்-ஈ’ வீல்சேரின் விலை 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
மாணவர்களின் இந்த வெற்றிக்கு பின்னால் முழு தூணாய் இருப்பவர் அம்ரிதா விஸ்வா வித்யாபீட பல்கலைக்கழகத்தின் இசிஇ துறையை சேர்ந்த உதவிப் பேராசிரியர் ராஜேஷ் கண்ணன் மேகலிங்கம். இதுகுறித்து அவர் கூறும்போது, “‘செல்ப்-ஈ’ வீல்சேர் தானாகவே இயங்கக் கூடிய வகையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் வீல்சேர் ஆகும். தனித்துவமானது. எந்தவித வெளிநாட்டு துணையின்றி நம்நாட்டு மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். மருத்துவமனை, விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்யப்பட உள்ளது” என்றார். சிந்தா ரவி தேஜா, சரத் ஸ்ரீகாந்த், அகில் ராஜ் ஆகியோரின் பல நாட்கள் முயற்சிக்கு பின் தற்போது இந்த வீல்சேர் உருவாக்கப்பட்டுள்ளது.