என்றுமில்லாத அளவாய் இந்த வருடம் வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என்ன? உயர்ந்த வெப்பநிலையால் ஸ்ட்ராடோஸ்பியரில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? விஞ்ஞானிகள் சொல்வதென்ன தெரிந்துக்கொள்ளலாம் வாங்க...
11 வருடத்திற்கு ஒருமுறை சூரியன் அதிகப்படியான வெப்பநிலையை உமிழும், இதை சோலார் சைக்கிள் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதன்படி 2024-2025 வருடம் சோலார் சைக்கிள் வருடமாக வந்துள்ளது. சோலார் சைக்கிள் வருடத்தில் சூரியனை தொலைநோக்கியின் வாயிலாகவோ அல்லது சூரிய வடிகட்டிகளின் மூலம் பார்க்கும் பொழுது அதில் சில கரும்புள்ளிகள் தென்படும் இதை விஞ்ஞானிகள் star parts என்கின்றனர்.
இது இப்படி இருக்க... சோலார் சைக்கிளான இந்தவருடம் சூரியனிலிருந்து வெளிவரும் அதிகளவு சக்திவாய்ந்த வெப்பமானது கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு அண்டார்ட்டிகாவையும் விடவில்லை. பனிப்பிரதேசமான அண்டார்டிகாவின் வெப்பநிலையானது 44 ஆண்டுகளில் காணப்படாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக நாசாவின் குளோபல் மாடலிங் மற்றும் அசிமிலேஷன் அலுவலகத்தின் (ஜிஎம்ஏஓ) வளிமண்டல விஞ்ஞானிகளான லாரன்ஸ் கோய் மற்றும் பால் நியூமன் கூறியுள்ளனர்.
இந்த குழுவினர் சோலார் சைக்கிள் தொடங்கியதும், அண்டார்டிகாவின் வளிமண்டலத்தை மிக நெருக்கமாக கண்காணித்து வந்தனர். குளிர்காலத்தில் வழக்கமாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 19 மைல்கள் (30 கிமீ) உயரத்தில் உள்ள நடுத்தர அடுக்கைக்கொண்ட ஸ்ட்ராடோஸ்பியர் மண்டலத்தின் வெப்பநிலையானது, மைனஸ் 80 டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால் ஜூலை 7 அன்று, -65 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது 44 ஆண்டுகளில் காணப்படாத வெப்பநிலையின் அளவாகும். இந்த அதிகப்படியான வெப்பநிலையானது இரண்டுவாரங்கள் வரை நீடித்ததாக ஆய்வாளார்கள் கூறியுள்ளனர். இந்த வெப்பநிலை அதிகரிப்பால், புவியின் வளிமண்டல துருவச்சூழலில், மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.