ஜோ பைடன் Twitter
டெக்

”AI தயாரிப்புகள் பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்து வெளியிடுங்கள்!” - சந்தேகம் எழுப்பும் ஜோ பைடன்!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தயாரிப்புகள் எந்தளவுக்கு சமூகத்திற்கும், மக்களிற்கும் பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்த பிறகே அந்தந்த நிறுவனங்கள் அதனை வெளியிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Rishan Vengai

செயற்கை நுண்ணறி தயாரிப்புகளானது முன்பெல்லாம் சில முக்கியமான பங்களிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டும், அதற்காகவே அவைகள் உருவாக்கப்பட்டும் வந்தன. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவானது அன்றாட பயன்பாட்டிற்கே அதிகம் பயன்படுத்தும் சூழ்நிலையை எட்டியுள்ளது. அதன் காரணமாகவே எழுந்து சென்று செய்ய வேண்டிய சிறுசிறு வேலைகளை கூட, உட்கார்ந்த இடத்திலிருந்தே இயக்க முடியும் என்றவரையிலான தொழில்நுட்ப பொருட்கள் தற்போது அதிகளவில் சந்தைகளில் உருவாகியுள்ளன.

தற்போது ஏற்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறவின் அதிதீவிர வளர்ச்சியானது மனிதகுலத்திற்கான ஆபத்தாக மாறிவிடுமோ என்ற அச்சம் அதிகளவில் எழுந்துவருகிறது. அந்த ஆபத்திற்கு பெரிய புள்ளையார் சுழியாக தற்போது பார்க்கப்படுவது, AI தயாரிப்பான Open AI ChatGPT தான். இதற்கு பிறகான தயாரிப்புகள் என்பது எப்படி இருக்கும், இது எந்த இடத்திற்கும் மனிதனை அழைத்து செல்லும் என்ற பல விவாதங்கள் தற்போது அதிகளவில் நடைபெற்றுவருகின்றன. AI தயாரிப்புகள் பற்றி விவரம் தெரிந்த சமூக ஆர்வலர்கள், தனிமனித சுதந்திரம், வேலைவாய்ப்பு, மனிதகுல பாதுகாப்பு முதலியவற்றை AI தயாரிப்புகள் பாதிக்கும் என்று கருதுகின்றனர். சிலர் போர் ஏற்படுவதற்கான சூழலை கூட இவை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.

ChatGpt

இந்நிலையில்தான் அமெரிக்க அதிபரான ஜோ பைடன், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய AI தயாரிப்புகளை பொதுவெளியில் அறிமுகம் செய்வதற்கு முன்னர், சமூகத்திற்கும், மக்களிற்கும் அது பாதுகாப்பானது தானா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது AI தயாரிப்புகள் ஆபத்தானதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ இருக்கலாம். அதனை உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார் பைடன்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்களின் ஜனாதிபதி கவுன்சில் (PCAST) கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நோய் மற்றும் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதில் AI தொழில்நுட்பத்தால் உதவ முடியும் என்று கூறினார். ஆனால், அதற்கு முன்னதாக இந்த புதிய தயாரிப்புகள் சமூகம், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு எதாவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியாதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜோ பைடன்

அப்போது பேசிய அவர், " அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை பொதுவெளியில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, அவை பாதுகாப்பானது தானா என்பதை உறுதிபடுத்த வேண்டும். அதை மேலும் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது" என்று கூறினார்.

ஜோ பைடன்

சக்தி வாய்ந்த தொழில்நுட்பங்களானது சரியான பாதுகாப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருப்பதால், சமூகத்தில் ஏற்பட்டுள்ள தீங்குகளை சமூக ஊடகங்கள் ஏற்கனவே விளக்கியுள்ளதாக தெரிவித்த அவர், "AI தயாரிப்பில் ஏற்படும் பாதுகாப்பின்மையால் மனநலம் மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகள், நம்பிக்கையின்மை போன்றவைகள் இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நாம் பார்க்கிறோம்" என்று கூறினார்.

மேலும், “தொழில்நுட்ப நிறுவனங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவுகளுக்கு வரம்புகளை விதிக்கவும், குழந்தைகளை இலக்காகக் கொண்ட விளம்பரங்களைத் தடை செய்யவும், மேம்பட்ட தயாரிப்பில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும்” அவர் மீண்டும் வலியுறுத்தினார்.