டெக்

ஏர்டெல், வோடாஃபோன், ஜியோ-வின் கிடுகிடு விலையேற்றம் : ஆடு, புலி ஆட்டம்..!

ஏர்டெல், வோடாஃபோன், ஜியோ-வின் கிடுகிடு விலையேற்றம் : ஆடு, புலி ஆட்டம்..!

webteam

இந்திய செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அண்மைக்காலமாக அடுத்ததடுத்த அதிர்ச்சி அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு வரை ஆஃபர்களுக்காகவும், ரேட் கட்டர்களுக்காவும் வாடிக்கையாளர்கள் அலைந்து கொண்டிருந்தனர். இவற்றுடன் மெசெஜ் பேக்கேஜ்களும் தனியாக இருந்தன. ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பின்னர் வாட்ஸ் அப் போன்ற செயலிகளால் மெசேஜ் பேக்கேஜ்கள் பயனற்றதாக மாறிவிட்டன. அதன்பின்னர் இண்டெர்நெட் டேட்டா பேக்கேஜ்களின் மவுசு அதிகரித்தது. அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன்கள் தவழ ஆரம்பித்ததால், இண்டர்நெட் டேட்டாக்கள் என்பது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறத்தொடங்கியது. அந்த சமயங்களில் இளைஞர்களின் பெரும் தேடுதலாக இலவச வைஃபை இடங்களை கண்டுபிடிப்பதாக இருந்தது.

இதுபோல, டேட்டாக்கள் மற்றும் ரிசார்ஜ்களுக்காக வாடிக்கையாளர்கள் திரிந்துகொண்டிருந்த நேரத்தில் தான் வந்தது ஜியோ. அதுகொடுத்த ஆஃபர் அடை மழையில், கடந்த சில வருடங்களாக வாடிக்கையாளர்கள் டேட்டாக்கள் தட்டுப்பாடின்றி இருந்தனர். அதேசமயம் ஜியோவின் வருகை ஏர்டெல், வோடாஃபோன் போன்ற மற்ற நிறுவனங்களுக்கு கண்ணீர் மழையை வரவழைத்தன. ஒருகட்டத்தில் அவர்களும் படிப்படியாக இறங்கி ஆஃபர்களை வாரி வழங்கினர். இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் வியாபாரப் போட்டி உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் தான் அன்லிமிடெட் போன் கால்ஸ் வழங்கி வந்த ஜியோ திடீரென கால்ஸ்களுக்கு கட்டணம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இது அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் அமைந்தது. இதனால் ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்களை மீண்டும் வாடிக்கையாளர்கள் திரும்பிப் பார்க்கலாம் என நினைத்தனர்.

ஆனால், அதற்குள் தங்கள் அனைத்து சேவைகளின் கட்டணங்களை உயர்த்துவதாக ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் அறிவித்தன. அடடா..! இது ஜியோவே பரவாயில்லை போல என வாடிக்கையாளர் நினைப்பதற்குள், தாங்களும் கட்டணங்களை உயர்த்துவதாக ஜியோவும் அறிவித்தது. சரிதான்.. மீண்டும் பழைய படி, ஆஃபர்களுக்கு, ரேட் கட்டர்களுக்கு அழைய வேண்டியது தான் என்ற மனநிலைக்கு வாடிக்கையாளர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், விலையேற்றத்தை இரவோடு இரவாக கொண்டுவந்துவிட்டன ஏர்டெலும், வோடாஃபோனும். 

அதன்படி, ஏர்டெல் நிறுவனத்தின், இணையதள டேட்டா மற்றும் கால் செய்யும் அன்லிமிடெட் திட்டத்தில் 28 நாட்களுக்கான கட்டணத்தை 129 ரூபாயிலிருந்து 148 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதேபோல் ஓர் ஆண்டுக்கான திட்டம் ஆயிரத்து 699 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 398 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வோடஃபோன் நிறுவனம் 28 நாட்களுக்கான கட்டணத்தை 179 ரூபாயிலிருந்து 299 ரூபாயாகவும், ஓராண்டு கட்டணத்தை ஆயிரத்து 699 ரூபாயிலிருந்து இரண்டாயிரத்து 399 ரூபாயாக உயர்த்திள்ளது. அத்துடன், சிம் ஆக்டிவ் ஆக இருக்க குறைந்த பட்சம் 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என இருந்தது, தற்போது 49 ரூபாயக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதேபோல ஜியோ நிறுவனமும் 40 விழுக்காடு வரை கட்டணங்களை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. இது டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடும் நஷ்டத்தை தொடர்ந்து வோடோபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த விலை ஏற்றத்தை அறிவித்துள்ளன.

நிறுவனங்களின் வியாபார போட்டியில் ஆஃபரில் கொண்டாட்டம் போட்ட வாடிக்கையாளர்கள், இந்த அறிவிப்புகளால் தற்போது மீண்டும் திண்ணாடும் நிலைக்கு வந்திருப்பதாக வருந்துகின்றனர். அதேசமயம் ஒருவரை கவர வேண்டுமென்றால், அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்ற சினிமா வசனத்தை போல, ஜியோ தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பிடித்துவிட்டதாக சிலர் சுட்டிக்காட்டுக்கின்றனர். அதுமட்டுமின்றி ஆடு, புலி ஆட்டத்தை போன்று தொடரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வியாபாரப் போட்டியில் இறுதியாக வாடிக்கையாளர்களே ஆடாக இருப்பதாகவும் பலர் வருந்துகின்றனர்.