புளூ மூன், ப்ளட் மூன், சூப்பர் மூன் என மூன்று அரிய வானியல் விந்தைகள் ஒரே நாளில் நிகழ்ந்துள்ளது. நிலவுக்கும் சூரியனுக்கும் நடுவே பூமி ஒரே கோட்டில் வரும்போது, சூரியனின் வெளிச்சத்தை பூமி மறைத்து, பூமியின் நிழலில் நிலவு இருக்கும் குறிப்பிட்ட நேரம் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. பாதி சந்திர கிரகணத்தை ஆண்டுக்கு இரண்டு முறை பார்க்கலாம். ஆனால், முழு சந்திர கிரகணத்தை காண்பது அரிது. அந்த முழு சந்திர கிரகணம் இன்று காலை உலகின் பல்வேறு இடங்களில் தெளிவாக தெரிந்துள்ளது.
சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவுக்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை 'ப்ளட் மூன்' என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த இரண்டு நிகழ்வு இணைந்து நிகழ்ந்த சூப்பர் சிவப்பு சந்திர கிரகணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர். முழு சந்திர கிரகணமும், சூப்பர் மூன் எனப்படும் ராட்சத நிலவும் இணைந்து உருவாகும் சூப்பர் பிளட் வுல்ப் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 10 மணி 11 நிமிடங்களுக்கு தொடங்கிய சூப்பர் பிளட் வுல்ப் எனப்படும் சந்திர கிரகணம், சுமார் 1 மணி நேரத்திற்கு நீடித்தது. இந்த நிகழ்வின்போது சிவப்பு நிறத்தில் தெரிந்த நிலவை வட மற்றும் தென் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சந்திர கிரகணம் இருக்காது என விண்வெளி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த முழு சந்திர கிரகணம் 2021 மே மாதம் நிகழும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.