சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கோப்புப்படம்
டெக்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப இன்னும் 8 மாதங்கள் ஆகிவிடுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Jayashree A

கடந்த ஜூன் 5ம் தேதி 10 நாள் பயணமாக போயிங் ஸ்டாலைனர் விண்கலத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச்வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டு சென்றனர். ஆனால் திட்டமிட்டபடி அவர்களால் 10 நாட்களில் பூமிக்கு திரும்பமுடியவில்லை.

இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர் இருவரும் இன்று வரை விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளனர். இவர்களின் நிலை குறித்து பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து நாசாவும், போயிங் விமானத்தை சேர்ந்தவரும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விளக்கத்தை அளித்து வந்தனர். அதில் “சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பத்திரமாக இருக்கின்றனர். போயிங் விண்கலம் சரி செய்யப்பட்டதால், ஆகஸ்ட் மாத இறுதியில் திரும்பி வரலாம்” என தெரிவித்திருந்தனர்.

சுனிதா வில்லியம்ஸ்

ஆனால் தற்பொழுது வந்த செய்திப்படி இருவரும் பூமி திரும்புவது மேலும் தாமதமாக்கப்பட்டுள்ளது என்றும் அநேகமாக 2025 பிப்ரவரி மாதம் இருவரும் திரும்பி வரலாம் என்றும் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக புத்தாண்டை அவர்கள் விண்வெளியில் கழிக்கக்கூடும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

அது சரி, சுனிதா வில்லியம்ஸூம் புட்ச் வில்மோரும் விண்வெளி சென்றது ஏன் தெரியுமா?

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப நாசா சீறிய முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்காக போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை செய்தது. அதன்படி ‘வரும் காலங்களில் மக்கள் விண்வெளிக்கு சென்று வர போயிங் ஸ்டார்லைனர் விண்கலமானது தகுதியானதுதானா?’ என்பதை தெரிந்துக்கொள்ள, சோதனை ஓட்டமாக விண்வெளி வீரர்கள் இருவரை நாசா விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. அப்படி சென்றவர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர். இந்நிலையில் போயிங் விமானத்தில் த்ரஸ்டர்கள் மற்றும் ஹீலியம் கசிவால் அது திரும்பி வர தாமதமாகியது.

போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் - சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் இருந்தபடி போயிங் நிறுவனத்துடன் இணைந்து அந்த விண்கலத்தை சரி செய்யும் பணியில் வீரர்கள் இணைந்திருந்தனர். பிறகு ‘அந்த விண்கலம் சரி செய்யப்பட்டு விட்டது; ஆகவே ஆகஸ்ட் மாதம் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவர்’ என்று சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் இப்பொழுது அந்தப் பழுது சரியாகவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் இருவரும் இங்கு ஆகஸ்ட்டில் வருவது கேள்விக்குறியாகி உள்ளது. மட்டுமன்றி இன்னும் 8 மாதங்கள் அவர்கள் அங்கேயே இருப்பர் என்ற நிலையும் உருவாகியுள்ளது.

அடுத்து என்ன நடக்கும்?

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் Crew Dragon என்ற விண்கலமானது, செப்டம்பர் மாத இறுதியில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உடை மற்றும் உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு விண்வெளி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் 4 பேரி பயணிக்கலாம். ஆகவே... திரும்பி வரும் இந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் திரும்பி வருவதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.

crew dragon

அப்படி இருவரும் ஸ்பேஸ் எக்ஸில் திரும்பி பூமிக்கு வந்தால், போயிங் நிறுவனம் விண்வெளி பிரயாணத்தில் பெரும் பின்னடைவை சந்திக்கும். அதே சமயம் விண்வெளியில் இருக்கும் ஸ்டார்லைனர் விண்கலமானது, வீரர்களே இல்லாமல் பூமிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.