சுனிதா வில்லியம்ஸ் PT
டெக்

திடீர் கோளாறு! 3மணி நேரத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்ட விண்கலம்; சுனிதா வில்லியம்ஸ் பயணம் ஒத்திவைப்பு

போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் என இருவரும் பத்திரமாக வெளியேறினர்.

Jayashree A

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று காலை 8.40 மணிக்கு போயிங்ஸ்டார் லைனர் விண்கலம் ஏவப்பட இருந்தது. இதில் பிரபல விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளிக்கு பயணப்பட இருந்தனர். ஆனால் கடைசி சில மணி நேரங்களுக்கு முன் அவர்கள் பயணிக்க இருந்த விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதையடுத்து விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் என இருவரும் பத்திரமாக வெளியேறினர்.

நாசா சொல்வதென்ன?

இது குறித்து நாசா தனது பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், போயிங் ஸ்டார்லைனர் விண்ணில் ஏவ சரியாக 90 நிமிடங்கள் மட்டுமே இருந்த போது அதன் ஏவுகலனான ‘அட்லஸ் - V’ ராக்கெட்டை ஏவும் பணி நிறுத்தப்பட்டது. அட்லஸ் V ராக்கெட்டின் சென்டார் மேல் நிலையின் திரவ ஆக்சிஜன் தொட்டியில் அழுத்தம் மற்றும், ஒழுங்குபடுத்தும் வால்வில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கோளாறு சரி செய்யப்பட்டவுடன் திட்டமிட்டப்படி விண்வெளிக்கு செல்லும் எனவும் தெரியவந்துள்ளது. மே 10 ஆம் தேதி அடுத்த பயண முயற்சி மேற்கொள்ளபடும் என்று நாசா அறிவித்துள்ளது.

யார் இந்த சுனிதாவில்லியம்ஸ்

அமெரிக்க கப்பல் படை விமானியான சுனிதா வில்லியம்ஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே இருமுறை விண்வெளிக்கு பயணம் செய்தவர். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடை பயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்திருக்கிறார். மேலும் 322 நாட்கள் அவர் விண்வெளியில் கழித்தும் இருக்கிறார்.

திட்டமிட்டப்படி இன்று அவர் விண்வெளி சென்றிருந்தால், உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் செல்லும் முதல் பெண் என்ற சாதனையை எட்டியிருப்பார்.

இருப்பினும் தனது மூன்றாவது விண்வெளி பயணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.