பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார், குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க நவீன படுக்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நவீன படுக்கை விரைவில் உலக அளவில் சந்தைக்கு வருகிறது.
குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்தப் பழக்கம் பெரும்பாலான குழந்தைகளிடம் உண்டு. இந்த வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கென நவீன படுக்கை ஒன்றை பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர் பலரிடம் ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வை வைத்து, வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய படுக்கை அமைப்பை ஃபோர்டு தயாரித்துள்ளது. மேக்ஸ் மேட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல வியத்தகு தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.
தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை மிமிக் செய்யக்கூடிய அமைப்புகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன. குழந்தைகளுக்கான படுக்கையாக மட்டுமில்லாமல், இதன்மூலம் குழந்தை எதுபோன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கவனிக்கத்தக்க பல சிறப்புகளைப் பெற்றுள்ள மேக்ஸ் மோட்டார் ட்ரீம்ஸ் கிரிப்பை தற்போது சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த நவீனத் தொட்டிலுக்கு பெரியளவிலான வரவேற்பு கிடைக்கும் என்பது ஃபோர்டு நிறுவனத்தின் நம்பிக்கை.