டெக்

சனி கிரகத்தின் மீது மோதி அழிய உள்ள காசினி விண்கலம்

webteam

நாசாவால் சனி கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட விண்கலமான காசினி, தனது பயணத்தை முடித்துக்‍கொண்டு இன்று அந்த கிரகத்தின் மீது மோதி அழிய உள்ளது.

நாசா விண்வெளி ஆய்வு மையம் சனிகிரகத்தை ஆராய காசினி என்ற விண்கலத்தை செலுத்தியது. நீண்டகாலம் பயணம் செய்த இந்த விண்கலம், சனிக்‍கிரகத்தின் வளையங்களை ஒவ்வொன்றாக தாண்டி, தற்போது அந்த கிரகத்திற்கு 1500 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. அதன் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், காசினி விண்கலம் சனி கிரகத்தின்மீது மோதி தூள் தூளாகும் வகையில் விஞ்ஞானிகள் அதனை வடிவமைத்துள்ளனர்.

தற்போது இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டுள்ள காசினி, சனி கிரகத்தின் இதுவரை கிடைக்‍காத புகைப்படங்களை நாசா நிலையத்திற்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. சனி கிரகத்தின் மேற்பரப்பை அடையும்போது, வெப்பம் காரணமாக அதன் பாகங்கள் ஒவ்வொன்றாக எரிந்து கருகிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எஞ்சிய பகுதி சனி கிரகத்தின் மீது மோதி அழிந்துவிடும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காசினி விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது.