பள்ளி மாணவர்கள் புதியதலைமுறை
டெக்

”யாழ்ப்பாணம் + தமிழ்நாடு மாணவர்கள்” - செயற்கைகோள் தயாரிக்க பயிற்சியளிக்கும் ’ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் செயற்கைகோள் வடிவமைப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்கவுள்ளது.

PT WEB

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் செயற்கைகோள் வடிவமைப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்கவுள்ளது.

15 வயதுக்கு உள்ளாகவே செயற்கைக் கோள் பற்றி அறிவைப் பெற்றிருக்கும் இவர்கள் வேளச்சேரி அரசுப் பள்ளி மாணவிகள். இவ்வாறான இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் முன்னெடுப்பை மேற்கோண்டுள்ளது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம். இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இளம் வயதிலேயோ மாணவ-மாணவியருக்கு செயற்கைக்கோள் பற்றிய நுண்ணறிவை கற்றுக் கொடுக்கிறது.

இந்தநிலையில் தான், இலங்கையில் உள்ள ஸ்லிப் நார்த்தன் பல்கலைக்கழகத்துடன் இந்த நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களும் கூட்டாக ஒன்றிணைந்து செயற்கைக்கோள்களை உருவாக்கி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 50 பள்ளி மாணவர்களுடன் இந்தியாவை சேர்ந்த 10 பள்ளி மாணவர்கள், 50 கல்லூரி மாணவர்களுக்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா பயிற்சி அளிக்க உள்ளது.

இது குறித்து இலங்கையைச் சேர்ந்த இண்டி பத்மநாதன், ஸ்லிட் பல்கலைக்கழகத் தலைவர், பேசுகையில்,

”மாணவ-மாணவியருக்கு மென்பொருள், வன்பொருள் என இரண்டு பிரிவுகளில் தனித்தனியே பயிற்சிகள் அளிக்கப்படஉள்ளன. செயற்கைக்கோள் உருவாக்கம் பற்றிய திறன் மேம்பாட்டை சிறுவயதில் இருந்தே கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது. இந்தப்பயிற்சி, செயற்கைக்கோள் மேம்பாட்டுத் தரவு பகுப்பாய்வு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மாணவர்களுக்கு திறன்களை மேம்படுத்த உதவுகிறது” என்கிறார்.

அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த எதிர்கால வாழ்க்கைக்கும் அவர்களை தயார் படுத்த வாய்ப்புள்ளதாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.