டெக்

அவசர உதவியை தெரிவிக்க ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர்...

அவசர உதவியை தெரிவிக்க ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர்...

webteam

தலை முதல் கால் வரை அனைத்தும் ஸ்மார்ட் தொழில்நுட்பமாக மாறிவரும் இந்த காலத்தில் மனித உயிர்களை காக்கக்கூடிய மற்றுமொரு ஸ்மார்ட் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகிள் ஹோம் அல்லது அமேசான் எக்கோ போன்ற ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆபத்து நேரத்தில் உதவக்கூடிய புதிய தொழில்நுட்பத்துடன் ஸ்பீக்கர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்த ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கரில் இந்த வசதி தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளது. வீட்டில் திடீரென ஏற்படும் அபாய காலங்களில் போலீசாருக்கு தானாகவே தொலைபேசி அழைப்பினை தொடர்பு கொண்டு அவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைக்கக்கூடியதாக இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கரை அமெரிக்காவின் நியூ மெக்ஸிக்கோ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 

911 என்ற அமெரிக்காவின் அவசர இலக்க எண் மூலமாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசாரை வரவழைக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் டிசையின் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்நாட்டில் இந்த ஸ்பீக்கர் விற்பனை செய்யப்படுகிறதோ அந்த நாட்டிற்கு ஏற்ப இந்த அவசர அழைப்பு எண் மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

வீட்டிற்குள் தீ, திருட்டு அல்லது பெண்கள் தனியாக இருக்கும் போது ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டால் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரின் மூலம் போலீசாருக்கு தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஸ்பீக்கர் மூலம் பாடல் கேட்டு மகிழ்வதோடு, பாதுகாப்பு சாதனமாகவும் இவற்றை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.