டெக்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் ஒரு பார்வை

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் ஒரு பார்வை

webteam

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய சுதந்திர தின உரையில், ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிட்டார். 

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படும். இதன்மூலம் வீராங்கனை உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பப்படுவர். 

இவர்கள் இந்திய விமானப் படை மற்றும் இஸ்ரோவிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள். வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு, ககன்யான் திட்டம் இரண்டு முறை ஆளில்லாமல் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். இதன்பிறகு மூன்று வீரர்கள் செல்லும் விண்கலம் 300-400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூமியின் குறைந்த தூர சுற்றுவட்டப் பாதையை 16 நிமிடங்களில் அடையும். 

வீரர்கள் செல்லும் விண்கலம் 3.7 மீட்டர் விட்டமும், 7 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். இதன் எடை 7 டன்களாக இருக்கும். விண்வெளியில் வீரர்கள் 5 முதல் 7 நாள்கள் வரை இருப்பார்கள். பின்னர் இறங்கும்போது ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் வங்கக் கடலில் இறங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

கடலில் இறங்கிய 20 நிமிடங்களில் வீரர்கள் மீட்கப்படுவார்கள். இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உருவாக்கப்படும் இந்த விண்வெளித் திட்டத்தை செயல்படுத்த 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். ககன்யான் திட்டத்தால் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மேம்படும் என்றும், இஸ்ரோ ஊழியர்கள் 861 பேர் உள்பட 15ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ககன்யான் திட்டத்தை 2022ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.