நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரியானது 2010 ஆண்டு முதல் சூரியனைக் கவனித்து வரும் ஒரு செயற்கைக்கோள். இது சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் வெட்பநிலை மற்றும் வெடிப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகிறது.
இந்த செயற்கைக்கோளானது நேற்று ஒரு மிகப்பெரிய சூரிய வெடிப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த வெடிப்பை ஆராய்ச்சியாளர்கள் X9 வகையைச்சார்ந்தது என்கிறார்கள்.
அக்டோபர் 1ம் தேதி, AR3842 என்ற சூரியப் புள்ளியிலிருந்து X7.1 அளவு கொண்ட சக்திவாய்ந்த ஒரு வெடிப்புத் தோன்றியது. அதை விஞ்ஞானிகள் கண்காணித்து வரும் நிலையில், நேற்று மீண்டும் அதே சூரிய புள்ளியிலிருந்து மீண்டும் X9.05 அளவுக்கொண்ட அதிக சக்தி வாய்ந்த வெடிப்பு ஒன்று தோன்றியுள்ளது.
இந்த வெடிப்பினால் ஏற்பட்ட பிளாஸ்மாக்கள் மிக வேகமாக பூமியை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாகவும், அந்த பிளாஸ்மாக்கள் இன்று முதல் அக்டோபர் 5 க்குள் எப்பொழுது வேண்டுமென்றாலும், பூமியின் காந்தபுலத்தை தாக்கி வானத்தில் வண்ணமிகு அரோராவைத் தூண்டலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த அரோராவாவை பூமியின் வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் வானத்தில் பார்க்கலாம்.
பிளாஸ்மா காந்த மண்டலத்தை தாக்கும் பொழுது, சக்திவாய்ந்த மின்னாற்றல் ஏற்படும். இது ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதியில் ரேடியோ பிளாக் அவுட்களை தூண்டும், இதனால் ரேடியோ தகவல் தொடர்புகள், மின்சாரம், சிக்னல்கள், விண்கலம் மற்றும் விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சரி.. அதென்ன X9 வகை ?
ஆராய்ச்சியாளர்கள் சூரிய வெடிப்பின் வீரியத்தை X,M,C,B,A என்று வகைப்படுத்தி வைத்து இருக்கின்றனர். இதில் A வெடிப்பு ஒரு பொட்டுவெடி போன்றது. அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. B-ஆனது A-யை விட பத்து மடங்கு அதிகம். C ஆனது B யை விட பத்து மடங்கு வீரியமிக்கது... இப்படி ஆராய்ச்சியாளர்கள் அதன் வெடிப்பைப் பொருத்து ABCMX என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். இதில் X9 அளவானது 2017 ஆண்டுக்குப்பிறகு சூரியனில் தோன்றிய மிகப்பெரிய வெடிப்பாகும்.