டெக்

மைக்ரோசாப்ட் தலைவராக சத்யா நாதெள்ளா நியமனம்

Sinekadhara

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் சத்யா நாதெள்ளா அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராகவும் தற்போது நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

மைக்ரோசாப்ட் தொடங்கப்பட்டதில் இருந்து மூன்றாவது தலைமைச் செயல் அதிகாரியாக மட்டுமல்லாமல் மூன்றாவது தலைவராகவும் இருந்து வருகிறார் சத்யா. இவருக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மருக்கு இயக்குநர் குழு தலைவராகும் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், ஜான் தாம்சன் மற்றும் பில்கேட்ஸ் ஆகியோர் மட்டுமே மைக்ரோசாப்ட் தலைவராக இருந்திருக்கின்றனர்.

முன்னதாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மருக்கு பதிலாக 2014-ம் ஆண்டு சத்யா நியமனம் செய்யப்பட்டார். அதே காலக்கட்டத்தில் ஜான் தாம்சன் இயக்குநர் குழுதலைவராக நியமனம் செய்யப்பட்டார். சத்யா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றபோது நிறுவனம் கடுமையான சிக்கலில் இருந்தது. மொபைல் போன் பிரிவில் தோல்வி, மற்றும் சர்ச் என்ஜின் தோல்வி என பல சிக்கலில் இருந்தது. அப்போது அவர் நிறுவனத்தின் கவனத்தை க்ளவுட் உள்ளிட்ட வேறு வழிகளில் செலுத்தினார். அதன்பிறகு மைக்ரோசாப்ட் பங்கானது ஏழு மடங்கு உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 2 லட்சம் டாலரை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், சத்யா தற்போது இயக்குநர் குழுவுக்கும் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஜான் தாம்சன் தினசரி அலுவல்கள் இல்லாத இயக்குநராக இயக்குநர் குழுவில் தொடர இருக்கிறார். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டது முதல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சத்யா பல முக்கிய பங்கு வகித்திருப்பதால் இயக்குநர் குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக மைக்ரோசாப்ட் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.