டெக்

`செல்போனை தவறவிட்டால் இதைமட்டும் செய்யுங்க... போன் சீக்கிரம் கிடைச்சுடும்’- வேலூர் எஸ்.பி.

`செல்போனை தவறவிட்டால் இதைமட்டும் செய்யுங்க... போன் சீக்கிரம் கிடைச்சுடும்’- வேலூர் எஸ்.பி.

நிவேதா ஜெகராஜா

வேலூர் மாவட்டத்தில் காணால் போன மற்றும் தவறவிட்ட 9 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர் காவல்துறையினர். இதுதொடர்பாக பேசிய வேலூர் எஸ்.பி, செல்போன் காணாமல் போனால் என்ன செய்ய வேண்டும் என்பதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் தவறவிட்ட செல்போன்கள் குறித்து வரப்பெற்ற புகார் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை மீட்பதற்கான பணியில் வேலூர் மாவட்ட சைபர் செல் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும்  திருட்டுப்போன சுமார் 9 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவரகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார். மேலும் செல்போன் கண்டுபிடித்து தரக்கோரி கிடைக்கப்பெற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர் மீட்பு பணியில் சைபர் செல் ஈடுபட்டுள்ளனர் படிப்படியாக செல்போன்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் எஸ்.பி ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய அவர், "செல்போனை திருடுபவர்கள், அடுத்த ஒரு மணி நேரத்தில் அதை மாற்றி விடுகிறார்கள். அப்படி மாற்றப்படும் அந்த செல்போனை, வேறு யாரேனும் பயன்படுத்த தொடங்கிவிட்டால் அதை விரைவாக மீட்க முடியும். இதற்கு செல்போனை தவற விட்டவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்னு தான். அது, தங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தங்களது செல்போனின் IMEI நம்பரை வைத்தோ அல்லது காணாமல் போன செல்போனில் இருந்த தொலைபேசி எண்ணை வைத்தோ புகார் அளிப்பது. நேரில் தான் புகார் அளிக்க வேண்டும் என்பது இல்லை. இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.

இப்படி தங்களுக்கு புகார் வரும் போது உடனடியாக எங்கள் சைபர் செல் காவல் துறையினர் மீட்கும் நடவடிக்கையை தொடங்கிவிடுவர். இதற்கு நேரம் காலம் எதுவும் கிடையாது. காணாமல் போன செல்போன் ஆன் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், அது எப்படிப்பட்ட மொபைலாக இருந்தாலும் எங்களால் கண்டுபிடிக்க முடியும். ஆகவே, பொது மக்கள் செய்ய வேண்டியது செல்போன் காணாமல் போன உடனே IEMI எண்ணை வைத்து விரைவாக புகார் அளிக்க வேண்டும்” என கூறினார்.